Published : 24 Sep 2016 07:54 PM
Last Updated : 24 Sep 2016 07:54 PM

சிங்கள, புத்த மயமாக்கலைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் ‘எழுக தமிழ்’ போராட்டம்

தமிழர் பகுதிகளில் சிங்கள, புத்த மயமாக்கல் நடவடிக்கைகளைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், யாழ்ப்பாணத்தில் இலங்கை தமிழர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக, ‘எழுக தமிழ்’ என்ற பெயரில், யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயில் அருகே காலை பேரணி தொடங்கியது. வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் பேரணிக்கு தலைமை தாங்கினார்.

‘தமிழர் பகுதிகளில் சிங்கள குடியிருப்புகளை அமைப்பது, புத்த கோயில்கள் கட்டுவது போன்ற நடவடிக்கைகளை இலங்கை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும்; ராணுவ தேவைகளுக்காக ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலங்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும்; தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும்; மாயமானவர்களை கண்டுபிடிப்பதில் அரசு உதவி வேண்டும்’ என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

‘(விடுதலைப் புலிகளுக்கு எதிரான) போர் முடிந்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை. இந்த நிலைமையை பிரதிபலிக்கவே இந்த கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படுகிறது’ என, சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.

தமிழ் மக்கள் தேசிய முன்னணி பேரணிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. பல்கலை மாணவர்கள் உட்பட வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்து பேரணியில் கலந்துகொண்டனர். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் வர்த்தக நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன.

மைத்ரிபால சிறிசேன கடந்தாண்டு இலங்கை அதிபராக பதவியேற்ற பிறகு, வடக்கு பகுதியில் பெரிய அளவில் பொதுமக்கள் கூடி போராட்டத்தில் ஈடுபடுவது இதுவே முதல்முறை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x