

வழக்கத்துக்கு மாறான, தீவிர தட்பவெப்ப நிலையும், ஆர்க்டிக் ‘வெப்ப அலைகள்’ தீவிர தாக்கம் ஏற்படுத்தும் என்று உலக வானிலை ஆய்வு அமைப்பு அறிக்கை ஒன்றில் எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டு முன்னெப்போதும் இல்லாத அளவில் வெப்ப அளவு உலகெங்கிலும் பதிவானதையடுத்து இந்த ஆண்டும் தீவிர தட்பவெப்ப நிலையே நீடிக்கும் என்றும் கடலில் பனிப்பாறைகளின் அளவு குறைந்து கடல் வெப்பம் தணியாது அதிகரிக்கும் என்றும் இந்த அறிக்கை எச்சரித்துள்ளது.
தொழிற்புரட்சிக்கு முந்தைய காலக்கட்டத்தைக் காட்டிலும் உலக வெப்ப அளவு 1.1பாகை அதிகரித்தது, கடல் நீர்மட்டம் இதுவரையில்லாத அளவு அதிகரித்துள்ளது, கடல் பனிப்பாறை 40 லட்சம் சதுர கிமீ பரப்பளவுக்கு உருகிக்கரைந்துள்ளது.
“வானவெளியில் செலுத்தப்படும் கரியமில வாயுவின் அளவு சீராக புதிய உச்சத்தை எட்டிக் கொண்டேயிருப்பதால் மானுட உற்பத்தி செயல்பாடுகளின் தாக்கம் வானிலை அமைவில் கடும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது தற்போது ஆதாரபூர்வமாக உறுதியாகியுள்ளது” என்று இந்த அமைப்பின் செயலர் தலாஸ் என்பவர் எச்சரித்துள்ளார்.
மேலும், “2017-ல் வலுவான எல் நினோ விளைவு இல்லையென்றாலும் பூவுலகில் ஏற்படும் மாற்றங்கள் வானிலை அமைப்பின் செயல்பாடுகளைப் புரிந்து கொள்வதற்கு நம் அறிவின் எல்லைகளுக்கு சவால் அளிக்கிறது” என்று உலக வானிலை ஆய்வு திட்ட இயக்குநர் டேவிட் கார்ல்சன் தெரிவித்துள்ளார். அதாவது, நாம் இப்போது ஆய்வு செய்ய முடியாத ஒரு நிலையில் உள்ளோம், விளைவுகளை கணிக்க முடியாத பிரதேசத்தில் இருக்கிறோம் என்றார்.
எனவே இந்த ஆண்டும், தீவிர வானிலையின் விளைவுகள் நீடிக்கும் என்கிறது இந்த அறிக்கை.