

உக்ரைனின் புதிய தலைமையை ஏற்க முடியாது என்று ரஷ்ய பிரதமர் திமித்ரி மெத்வதேவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனை விட்டு வெளியேறி ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ள விக்டர் யனுகோவிச்தான் அதிகாரப்பூர்வமாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் என்றும் மெத்வதேவ் உறுதிபடக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் மேலும் கூறியிருப்பது: யானுகோவிச்சை தூக்கி வீசி விட்டு உக்ரைனில் புதிதாக ஆட்சி அமைத்துள்ளவர்களை ரஷ்யா நிச்சயமாக ஏற்றுக் கொள்ளாது. எனெனில் அவர்கள் செய்திருப்பது உக்ரைன் அரசியல் சாசன சட்டத்தை மீறிய செயல். உக்ரைனின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் யானுகோவிச் மட்டும்தான்.
உக்ரைனில் அடுத்த கட்டமாக என்ன நடந் தாலும் அதனை எதிர்கொள்ள ரஷ்யா தயாராக உள்ளது.
உக்ரைனில் ரஷ்யர்கள், யூதர்கள், உக்ரைனிகள், டாடாரஸ் என பல்வேறு மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகின்றனர் என்று மெத்வதேவ் கூறியுள்ளார்.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் உத்தரவுப்படி தான் உக்ரைனில் ரஷ்ய ராணுவம் நுழைந்தது என்பது தொடர்பாக மெத்வதேவ் கருத்து எதையும் தெரிவிக்கவில்லை.
துறைமுகத்தை பிடித்தது ரஷ்ய படை
உக்ரைனின் கிரிமியா பகுதியில் ஊடுருவி யுள்ள ரஷ்ய படையினர் அங்குள்ள துறை முகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன் மூலம் கருங்கடல் பகுதி வழியாக உக்ரைனுக்குள் கூடுதல் படைகள் அனுப்ப ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
புதினிடம் ஏஞ்சலா மெர்கல் வலியுறுத்தல்
உக்ரைனின் இறையாண்மையையும், பிராந்திய ஒருமைப்பாட்டையும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மதிக்க வேண்டும் என்று ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் வலியுறுத்தியுள்ளார்.
புதினை தொடர்பு கொண்டு பேசிய அவர், உக்ரைனின் கிரிமியா பகுதியில் ரஷ்யா ராணுவம் நுழைந்திருப்பது ஏற்றுக் கொள்ளவே முடியாதது என்று தனது ஆட்சேபத்தைத் தெரிவித்துள்ளார்.