

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பாக 52 இந்தியர்களை சிங்கப்பூரில் இருந்து அந்நாட்டு அரசு வெளியேற்றியுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
கடந்த 8 ஆம் தேதி லிட்டில் இந்தியா பகுதியில், சக்திவேல் குமாரவேலு என்ற தமிழர் சாலை விபத்தில் பலியானார். இதையடுத்து அங்கு பெரும் கலவரம் வெடித்தது. இது தொடர்பாக 28 இந்தியர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 200 பேர் எச்சரித்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதே சமயம் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டு, சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என சிங்கப்பூர் அரசு அறிவித்திருந்தது. இதன்படி, 53 இந்தியர்கள் நாடுகடத்தப்படுகின்ற னர். இதற்கான நடவடிக்கைகளை சிங்கப்பூர் அரசு வெள்ளிக்கிழமை தொடங்கியது. நாடுகடத்தப்பட்ட அவர்கள் மீண்டும் சிங்கப்பூருக்குள் நுழைய முடியாது. இதுதொடர்பாக சிங்கப்பூர் வெளியுறவுத் துறை அமைச்சர் கே.சண்முகம் கூறுகையில், “53 நபர்கள் நாடுகடத்தப்படுவது என்பது நிர்வாக அணுகுமுறை என்பதை விட, நீதி பரிபாலனம் சார்ந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நாடுகடத்தும் செயலை, சில தன்னார்வ அமைப்புகள் கேள்விக்கு உட்படுத்தியுள்ளன. அகதிகளுக்கான மனித உரிமைகளின் ஐ.நா. சிறப்புப் பிரதிநிதிக்கும் இது தொடர்பாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 28 இந்தியர்கள் மீதான நீதிமன்ற விசாரணை வரும் திங்கள்கிழமை தொடங்குகிறது.