

அமெரிக்காவின் கான்சாஸ் நகரத்தில் இந்திய பொறியாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இனவெறி காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவத்தின் போது இந்தியர்களைப் பாதுகாக்க முயன்ற இயன் க்ரிலாட் என்ற நபர் காயமடைந்தார்.
கடந்த புதன்கிழமையன்று, கான்சாஸ் நகரத்தின் ஒலாதே பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை விடுதியில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீனிவாஸை, அங்குவந்த நபர் ஒருவர் சுட்டுக் கொன்றுள்ளார்.
''என் நாட்டை விட்டு வெளியேறு'' என்று கூறிக்கொண்டே இந்தியப் பொறியாளரை அந்த நபர் சுட்டதாகக் கூறப்படுகிறது.
சுட்டுக் கொல்லப்பட்ட நபர் அமெரிக்க நிறுவனமொன்றில் விமானப் போக்குவரத்து பொறியாளராகப் பணிபுரிந்த 32 வயதான ஸ்ரீனிவாஸ் குச்சிபோட்லா எனத் தெரியவந்துள்ளது. இந்த கொலையை செய்தவர் ஆடம் பூரிண்டன் எனும் கடற்படை வீரர் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவத்தின் போது அருகில் இருந்து துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 24 வயது அமெரிக்கர் இயன் க்ரிலாட் என்பவர் கூறும்போது, “பாதிக்கப்பட்டோர் எங்கிருந்து வந்திருக்கிறார்கள் என்பதோ அவர் எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதோ முக்கியமல்ல நாமெல்லாம் மனிதர்கள்” என்றார்.
பாரில் பணியாற்றி வரும் காரெத் பான்ஹென், சீனிவாஸ் குச்சிபோட்லா மற்றும் மதாசனி ஆகியோர் வாரத்தில் ஓரிருமுறை ஆஸ்டின்ஸுக்கு வந்து மதுபானம் அருந்துவார்கள் என்றார்.
“இருவர் மீதும் நிறவெறி வசைகளை ஒருவர் பயன்படுத்திய போது இயன் க்ரிலாட் என்ற இந்த மனிதர் இந்தியர்களுக்காக அவரை எதிர்த்து நின்றார்” என்றார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய பியூரிண்டன் (51), ‘எங்கள் நாட்டை விட்டு வெளியேறு’ என்று கத்தியபடியே சுட்டதாக நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
இயன் க்ரிலாட் கூறும்போது, “நான் அந்த நபரை துரத்தி அவரை வீழ்த்த எண்ணினேன். நான் அவன் பின்னால் சென்ற போது அவன் திரும்பி துப்பாக்கியால் என்னையும் சுட்டான். அவன் ஏற்கெனவே சுட்டிருந்ததால் தோட்டாக்கள் தீர்ந்து விட்டது என்றே நினைத்தேன். குண்டு கை வழியாக மார்பைத் தாக்கியது ஆனால் முக்கிய ரத்த நாளம் தப்பியதால் பிழைத்தேன்” என்றார்.
பிரையன் எரிக் ஃபோர்டு என்ற கிராபிக் கலைஞ்சர் சுட்டுக் கொல்லப்பட்ட சீனிவாஸுக்கு நிதி திரட்டும் செயலில் ஈடுபட்டுள்ளார். “தேர்தலிலிருந்தே நான் ஒருவிதமான வெள்ளை தேசிய வெறி தலைதூக்குவதை பார்த்து வருகிறேன். பாதிக்கப்படும் இனத்தவர்களுக்கு ஆதரவு அளிக்க இதுவே சிறந்த தருணம் என்று நினைத்து நிதி திரட்டுவதில் இறங்கியுள்ளோம். வியாழன் வரை 816 பேர் நிதிக்கு பங்களிப்பு செய்ததில் 29,726 டாலர்கள் வசூலாகியுள்ளது. 50,000 டாலர்கள் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.