

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டுவந்துள்ள நிலையில், அணிசேரா இயக்க நாடுகளின் ஆதரவை இலங்கை கோரியுள்ளது.
இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்த இறுதிக்கட்ட போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பாக, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம் வாக்கெடுப்புக்கு காத்துள்ளது. இத்தீர்மானம் வெற்றி பெற்றால் இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச நாடுகள் விசாரணை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இத்தீர்மானம் தொடர்பாக அணிசேரா இயக்க நாடுகளின் ஆதரவை இலங்கை கோரியுள்ளது.
ஜெனீவாவில், ஆசியா – பசிபிக் பிராந்திய கூட்டமைப்பு நாடுகள் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள் மத்தியில் இலங்கை மனித உரிமைகள் விவகாரத்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்கே பேசினார். அப்போது ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இடம்பெற்றுள்ள அணிசேரா இயக்க நாடுகளின் ஒருமித்த ஆதரவை அவர் கோரியதாக இலங்கை அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் சமரசிங்கே பேசுகையில், “இலங்கை இன்று சந்திக்கும் இப் பிரச்சினையை நாளை அணிசேரா இயக்க நாடுகள் சந்திக்க நேரிடலாம். இலங்கையில் உள்நாட்டுப் போரால் இடம்பெயர்ந்த 3 லட்சம் மக்களின் நல்வாழ்வில் அரசு போதிய அக்கறை செலுத்திவருகிறது. விடுதலைப்புலிகள் இயக்கத்தின் 12 ஆயிரம் உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளித்துள்ளோம். எஞ்சியவர்களை மறுகுடியேற்றம் செய்துள்ளோம்.
உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த 5 ஆண்டுகளுக்குள் இதுபோன்ற பணிகளை விரைவாக மேற்கொண்டுள்ள நிலையில், இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயல்வது நியாமற்றது. இலங்கை அரசு மேற்கொண்டு வரும் நல்லிணக்கப் பணிகளில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது” என்றார்.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 47 நாடுகள் இடம்பெற்றுள்ன. இதில் பார்வையாளர் நாடுகள் மற்றும் அணிசேரா இயக்க நாடுகளின் எண்ணிக்கை 33 ஆக உள்ளது.