

ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடானில் கலவரம் நடைபெற்று வரும் சூழலில், அங்குள்ள ஐ.நா. அமைதிப் படையில் இடம்பெற்றுள்ள இந்திய ராணுவ வீரர்களின் பாதுகாப்பு உள்ளிட்ட இந்தியாவின் கவலைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஐ.நா. தீர்மானம் அமைந்துள்ளது.
இந்தியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இல்லாததால், ஐ.நா. பாதுகாப்புக் குழு தீர்மானத்தின் மீது தனது செல்வாக்கைச் செலுத்த முடியவில்லை. இருப்பினும் இந்தியாவுக்கு ஆதரவாக ரஷ்யா, பாகிஸ்தான், கௌதமலா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் செயல்பட்டதால் ஐ.நா. தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலுக்கு படைபலத்தைப் பயன்படுத்த அதிகாரமளிக்கும் ஐ.நா. சாசனம் அத்தியாயம் 7ன் கீழ் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், தெற்கு சூடானில் இரு பிரிவினரும் மோதலைக் கைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள ஐ.நா. முகாம் மற்றும் அப்பாவி மக்கள் மீதான தாக்குதலுக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு சூடானில் உள்ள ஐ.நா. அமைதி பேணும் படையில் இந்திய ராணுவத்தினரும் உள்ளனர். அங்கு நடந்த மோதலில் நடப்பு ஆண்டு மட்டும் 7 இந்திய வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பாக இந்தியா கவலை தெரிவித்தது. பல்வேறு இடங்களில் மிகக் குறைந்த ராணுவ வீரர்கள் அதிக மக்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. தொலைதூரப் பிரதேசங்களிலும், விரைவில் சென்றடைய முடியாத இடங்களிலும் மிகக் குறைந்த இந்திய வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அண்மையில் அகோபோ பகுதியில் உள்ள ஐ.நா. முகாம் மீது 2,000 கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். அவர்களை எதிர்த்து வெறும் 40 இந்திய வீரர்கள் தீரத்துடன் போரிட்டனர். இதில் 2 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர், மூவர் காயமடைந்தனர்.
இது தொடர்பாக இந்தியா தனது கவலைகளை வெளிப்படுத்தியிருந்தது. இதற்குத்தீர்வு காணும் விதமாகவே, தெற்கு சூடானில் உள்ள படை வீரர்களின் எண்ணிக்கையை 14 ஆயிரமாக உயர்த்த தீர்மானத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. காங்கோ குடியரசு, தர்புர், அப்யேய் (சூடான்), லைபீரியா, ஐவரி கோஸ்ட் ஆகிய பகுதிகளில் உள்ள ஐ.நா. அமைதி பேணும் படை தெற்கு சூடானுக்கு அனுப்பப்படவுள்ளது. தற்போது தெற்கு சூடானில் உள்ள 7,000 வீரர்களில் இந்தியாவைச் சேர்ந்த 2,237 பேர் உள்ளனர்.
ஐ.நா. முகாம்களில் உள்ளவர்களைப் பாதுகாக்க, அங்கு பணியமர்த்தப்பட்டுள்ள அமைதி பேணும் படைக்கு முழு உரிமை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்படையின் செயல்பாட்டுக்கு எதிரானவர்களுக்கு கடும் எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இது, அங்குள்ள ஐ.நா. படையினருக்கு தங்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்தாக்குதலை நடத்துவதற்கு போதுமான வலிமையைக் கொடுத்துள்ளது என இந்தியா தெரிவித்துள்ளது.