

இலங்கை வடக்கு மாகாணத்தில், தமிழர்களின் 700 ஏக்கர் நிலம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் மறுவாழ்வுக்காக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணித்தில் வடக்கு வலிகாமம் மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் இருந்த நிலங்கள் ராணுவ கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக, தமிழ் தேசிய கூட்டணி கூறும்போது, “அதிபர் மைத்ரிபால சிறிசேனாவிடம் நாங்கள்விடுத்த கோரிக்கைக்கு பலன் கிடைத்துள்ளது. அற்காக அவருக்கு நன்றி கூறுகிறோம். ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எஞ்சிய நிலங்களையும் மிக விரைவில் திருப்பி அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு ஜனவரியில் இலங்கை அதிபராக தேர்வான சிறிசேனா, ராணுவ உபயோகத்துக்காக 30 ஆண்டுகளுக்கும் மேலாக கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விடுவிப்பதாக உறுதி அளித்திருந்தார். அதன்படி, அவ்வப்போது தமிழர்களின் நிலங்கள் திருப்பி அளிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த மார்ச் மாதம் 1,000 ஏக்கர் நிலம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.
போரால் பாதிக்கப்பட்ட தமிழர்கள், தங்களின் நிலத்தை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். ஏராளமான தமிழர்கள் உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்து முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் பயணம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அங்கு இயல்பு நிலை திரும்பச் செய்வதற்காக சிறிசேனா அரசு கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.