மத போதகர் ஜாகிர் நாயக்கின் ‘பீஸ் மொபைல் போன்’களுக்கு தடை விதித்தது வங்கதேச அரசு

மத போதகர் ஜாகிர் நாயக்கின்  ‘பீஸ் மொபைல் போன்’களுக்கு தடை விதித்தது வங்கதேச அரசு
Updated on
1 min read

முஸ்லிம் மத போதகர் ஜாகிர் நாயக்கின், ‘பீஸ் மொபைல் போன்’களுக்கு வங்கதேச அரசு தடை விதித்திருக்கிறது.

‘ஜாகிர் நாயக்கின் எந்தவிதமான பிரசுரங்களையும் வெளியிடக் கூடாது என அரசு தெளிவான உத்தரவை பிறப்பித்திருப்பதால், அவரின் பிரசுரங்கள் அடங்கிய ‘பீஸ் மொபைல் போன்’களை இனி அனுமதிக்க முடியாது’ என, வங்கதேச தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் ஷாஜஹான் மஹமூத் தெரிவித்துள்ளார்.

நாயக்கின் பிரசுரங்கள் தீவிரவாதிகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் இருப்பதாகவும், கடந்த 1-ம் தேதி டாக்கா உணவக தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள், நாயக்கின் பிரசங்கங்களால் ஈர்க்கப்பட்டவர்கள் என்றும் கூறப்பட்டதை அடுத்து, வங்கதேசத்தில் நாயக்கின் பிரச்சாரங்கள் தடை செய்யப்பட்டன.

நாயக்கின், ‘பீஸ் டிவி’யை தொலைக்காட்சி மற்றும் இணையதளம் மூலமாக ஒளிபரப்பவும் வங்கதேச அரசு தடை விதித்துள்ளது. இதைத்தொடர்ந்து, ‘பீஸ் மொபைல் போன்’களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘முதல் இஸ்லாமிய ஸ்மார்ட்போன்’ என்ற விளம்பரத்துடன் சந்தைக்கு வந்த இந்த கைபேசியில், ‘குரான்’ ஓதுவதற்கான வசதிகள், தொழுகை நேர நினைவூட்டல், இஸ்லாமிய வால்பேப்பர்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் உள்ளன.

ஜாகிர் நாயக்கின் ‘பீஸ் டிவி’ பிரசங்கங்களை, ஆங்கிலம், இந்தி, உருது போன்ற மொழிகளில் கேட்கவும், பார்க்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் இந்த கைபேசிகளை, ‘பெக்சிக்கோ’ குழுமம் இறக்குமதி செய்து விற்பனை செய்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in