

இத்தாலியைச் சேர்ந்த 26 வயது டேனியல் பார்ரெஸி உணவுப் பொருள் சிற்பக் கலைஞர். உலக சாம்பியன் பட்டங்களையும் பல்வேறு விருதுகளையும் பெற்றவர். இவரது சமீபத்திய சோப்பு சிற்பங்கள் உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றன. 7 வயதிலிருந்தே உணவுப் பொருட்களில் சிற்பங்களைச் செதுக்க ஆரம்பித்துவிட்டார் டேனியல். சொந்தக் காரணங்களால் இவரால் பள்ளிக் கல்விக்கு மேலே படிப்பைத் தொடர முடியவில்லை. 5 ஆண்டுகளுக்குப் பிறகு சமையல் கலையில் ஆர்வம் வந்து, படிக்க ஆரம்பித்தார். அங்கே தன்னுடைய சிற்பக் கலையை எடுத்துக் காட்டும் வாய்ப்பு கிடைத்தது. அதிக மதிப்பெண்களுடன் வெளிவந்தபோது, அவருக்கு உணவுப் பொருள் சிற்பங்களின் மீது ஈடுபாடு அதிகரித்தது. அதையே தன் தொழிலாக எடுத்துக்கொண்டார். சர்வதேச அளவில் பதக்கங்களையும் பரிசுகளையும் குவித்து வருகிறார். உலகின் மிகச் சிறந்த உணவுப் பொருள் சிற்பக் கலைஞர்களில் முக்கியமானவர் டேனியல். தன்னுடைய திறமையைப் பல்வேறு பொருட்களில் செய்து பார்க்க நினைத்தார். சோப்பு சரியான தேர்வாக அமைந்தது. உணவுப் பொருட்களில் வடிக்கும் சிற்பங்கள் சில நாட்களுக்குத்தான் தாக்குப் பிடிக்கும். ஆனால் சோப்பு சிற்பங்களுக்கு அழகும் ஆயுளும் அதிகம். “நான் சிற்பம் வடிப்பது ஒரு மேஜிக் மாதிரிதான் தெரிகிறது. கத்தியைத் தொட்டவுடன் மூளை கற்பனையை விரல்களுக்கு அனுப்பி வைக்கிறது. விரல்கள் சில மணி நேரங்களில் சோப்பை ஒரு சிற்பமாக மாற்றி விடுகின்றன” என்கிறார் டேனியல்.
அடடா! அசர வைக்கின்றனவே இந்த சோப்பு சிற்பங்கள்!
உலகம் முழுவதும் மகளிர் தினக் கொண்டாட்டங்கள் வணிகமயமாகிவிட்டன. ரஷ்யாவில் 101 ரோஜாக்களைக் கொண்ட பெரிய பூங்கொத்துடன் 10 நிமிடங்கள் புகைப்படம் எடுத்துக்கொள்வதற்கு 900 ரூபாயிலிருந்து 1,100 ரூபாய் வரை கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. “மகளிர் தினத்தின்போது தோழிகளுக்கு மலர்க்கொத்து கொடுத்து, புகைப்படம் எடுத்துக்கொள்ள பெரும்பாலான ஆண்கள் விரும்புகின்றனர். ஆனால் எல்லோராலும் பணம் செலவு செய்ய முடிவதில்லை. அவர்களுக்காகவே இந்தச் சேவையை ஆரம்பித்திருக்கிறேன். எங்களிடம் விதவிதமான ரோஜாக்களில் மிகப் பெரிய பூங்கொத்துகள் இருக்கின்றன. தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தால், வீடுகளுக்கே பூங்கொத்து, புகைப்படக்காரருடன் சென்றுவிடுவோம். இந்த ஆண்டு எங்கள் சேவைக்கு மிகப் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்திருக்கிறது. பணம் இல்லாததால் ஒருவர் தன் தோழிக்கு வாழ்த்துச் சொல்ல முடியவில்லை என்ற சூழல் இனி ஏற்படாது. வாழ்த்துச் சொல்வதற்குத் தோழி இல்லாதவர்களுக்கு ஒரு மாடலையும் ஏற்பாடு செய்து, பூங்கொத்து அளிக்கச் செய்கிறோம்” என்கிறார் இந்த நிறுவனத்தை நடத்திவரும் யூஜின்.
ரஷ்ய புரட்சிக்கே வித்திட்ட மகளிர் போராட்டங்கள் விளைந்த மண்ணில், இப்படி ஒரு மகளிர் தினக் கொண்டாட்டமா?