

கட்டிட இடிபாடுகளில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அலெப்போ நகர சிறுவனின் படம் சிரியா உள்நாட்டுப் போரின் உண்மையான முகத்தைப் பிரதிபலிக்கிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சிரியாவில் பலமுனை உள்நாட்டுப் போர் நடைபெறுகிறது. அந்த நாட்டின் 2-வது பெரிய நகரான அலெப்போவின் பெரும்பகுதி எதிர்க்கட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. மற்றொரு பகுதி அதிபர் ஆசாத் வசமும், இதர பகுதி ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமும் உள்ளது. அலெப்போ நகரம் முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர மூன்று தரப்பினரும் பரஸ்பரம் போரில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் பின்னணியில் எதிர்க்கட்சிகள் கட்டுப்பாட்டில் உள்ள அலெப்போ பகுதி மீது நேற்று முன்தினம் அரசுப் படைகள் வான்வழி தாக்குதல் நடத்தின. இதில் குடியிருப்பு பகுதிகளில் குண்டுகள் விழுந்து வீடுகள் தரைமட்டமாகின. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கிக் கொண்டனர். ‘வொயிட் ஹெல்மெட்’ என்ற தன்னார்வ அமைப்பினர் நேற்று முன்தினம் இரவு முழுவதும் போராடி அவர்களை மீட்டனர்.
அப்போது ஓமரான் தாக்னிஷ் என்ற 5 வயது சிறுவன் கட்டிட இடிபாடுகளில் இருந்து படுகாயங்களுடன் மீட்கப்பட்டான். ரத்தம் தோய்ந்த நிலையில் உடல் முழுவதும் தூசி படிந்து திகைப்புடன் ஆம்புலன்ஸ் வாகனத்தில் அமர்ந்திருக்கும் அந்த சிறுவனின் வீடியோ, புகைப்படத்தை ‘வொயிட் ஹெல்மெட்’ அமைப்பினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோ, புகைப்படம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளி யுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி நிருபர்களிடம் பேசியபோது, படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிறுவன் ஓமரானின் படம் சிரியா உள்நாட்டுப் போரின் உண்மையான முகத்தைப் பிரதிபலிக்கிறது என்று தெரிவித்தார்.
சிரியா எதிர்க்கட்சிகளுக்கு அமெரிக்காவும் அதிபர் ஆசாத்துக்கு ரஷ்யாவும் ஆதரவு அளித்து வருகின்றன. சிறுவனின் படம் ஏற்படுத்திய தாக்கத்தால் 48 மணி நேர சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த தயார் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.