Published : 18 Feb 2017 10:02 AM
Last Updated : 18 Feb 2017 10:02 AM

உலக மசாலா: அடடா! பக்கத்து வீட்டு முதியவரை எவ்வளவு அருமையாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார் கிறிஸ்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கிறார் 31 வயது ஹாலிவுட் நடிகர் கிறிஸ் சால்வடோரே. இவரது குடியிருப்பில் 89 வயது நோர்மா குக் தனியாக வசித்து வந்தார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் ஜன்னல் வழியாக நோர்மாவைப் பார்த்தார் கிறிஸ். உடனே அவரிடம் பேச வேண்டும் என்று தோன்றியது. தன்னை அறிமுகம் செய்துகொண்டார். அடிக்கடி சந்தித்ததில் இருவரும் நண்பர்களாக மாறிவிட்டனர். “இண்டீரியர் டிசைனராக இருந்து ஓய்வுபெற்றவர் நோர்மா. 45 வயதில் விவாகரத்துப் பெற்றுக்கொண்டார். குழந்தைகள் இல்லை. மீதிக் காலங்களைத் தனிமையிலேயே கழித்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளாக ரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். ஆனாலும் தன் வேலைகளைத் தானே செய்துகொண்டு, மிகவும் தன்னம்பிக்கையோடும் மகிழ்ச்சியாகவும் அவர் இருந்தது என்னை ஆச்சரியப்படுத்தியது. ஒரு காதல் தோல்வியில் இருந்து நான் மீள்வதற்குச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். தன் அன்பால் என் துயரத்தைத் துடைத்தார் நோர்மா. சில மாதங்களுக்கு முன்பு நோர்மாவின் உடல்நிலை மோசமானது. மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். இனி மருந்துகளால் காப்பாற்ற முடியாது என்றார்கள். என் வீட்டுக்கே அவரை அழைத்து வந்து விட்டேன். நோர்மாவின் இறுதிக் காலங்களைச் சந்தோஷமாக்கினேன். காதலர் தினத்தன்று, மறுநாளே அமைதியான முறையில் உலகைவிட்டுச் சென்றார் நோர்மா. நான்கு ஆண்டுகளாக இணையத்தில் நோர்மாவைப் பற்றி எழுதிவருகிறேன். ஏராளமான மக்களின் மனத்தில் சிறந்த பெண்மணியாக நோர்மா இருக்கிறார்” என்கிறார் கிறிஸ் சால்வடோரே.

அடடா! பக்கத்து வீட்டு முதியவரை எவ்வளவு அருமையாகப் பார்த்துக்கொண்டிருக்கிறார் கிறிஸ்!

அமெரிக்காவின் நியூபரியில் உள்ள கிராமத்தின் சாலையோரத்தில் Chicken farmer I still love you என்று பாறையில் எழுதப்பட்டிருக்கிறது. வழிகாட்டும் பலகை போலிருக்கும் இந்தப் பாறையில் ஏன் இப்படி எழுதப்பட்டிருக்கிறது என்ற விஷயம் பலருக்கும் தெரியாது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் ஒரு குடும்பம் வசித்து வந்தது. அவர்கள் வீட்டுக்குப் பின்னால் கோழிப் பண்ணை வைத்திருந்தனர். அந்த வீட்டில் க்ரெட்சன் என்ற இளம் பெண் இருந்தார். திடீரென்று ஒருநாள் அந்தப் பெண்ணிடம் காதலைச் சொல்வதற்காக யாரோ ஒருவர், ‘சிக்கன் பார்மர் ஐ லவ் யூ’ என்று பெயிண்ட்டால் எழுதி வைத்துவிட்டார். அந்தப் பெண்ணுக்கோ, அவர்கள் குடும்பத்துக்கோ யார் எழுதியது என்றே தெரியவில்லை. ஆண்டுகள் சென்றன. மீண்டும் ஒருநாள், ‘சிக்கன் பார்மர் ஐ ஸ்டில் லவ் யூ’ என்று புதிதாக எழுதப்பட்டிருந்தது. யார் எழுதியது என்று தெரியாவிட்டாலும் அது ஓர் அடையாளமாக மாறியிருந்தது. 1997-ம் ஆண்டு சாலைப் பணியாளர்கள் இந்தப் பாறையை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் அந்தப் பகுதி மக்கள் அதைத் தடுத்து நிறுத்திவிட்டனர். அன்று முதல் பெயிண்ட் அழியும்போதெல்லாம் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளாமல் யார் யாரோ புதிதாகப் பாறையில் எழுதி வைத்துவிடுகிறார்கள்.

இந்த அரும் பணியைச் செய்பவர்கள் யாராக இருக்கும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x