Last Updated : 12 Apr, 2017 10:47 AM

 

Published : 12 Apr 2017 10:47 AM
Last Updated : 12 Apr 2017 10:47 AM

முகாமில் இருந்த தமிழர்களுக்காக வவுனியா அருகே 150 புதிய வீடுகள் இந்த ஆட்சியையும் விரட்ட வேண்டிய நிலை வரும்: சிறிசேனா அரசுக்கு இரா.சம்பந்தன் எச்சரிக்கை

சிறிசேனா அரசு பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆகியும் தமிழர்களின் வாழ்வில் எதிர்பார்த்த மாற்றம் ஏற்படவில்லை. இனியும் இதேநிலை தொடரு மானால் எங்களால் காத்திருக்க முடியாது. இந்த ஆட்சியையும் விரட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி அடைபட்டிருந்த 150 தமிழ்க் குடும்பங்களுக்கு வவுனியா அருகே சின்னடம்பன் என்ற இடத்தில் புனரமைக்கப்பட்ட கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது. ஞானம் பவுண்டேஷன் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள லைக்கா-ஞானம் கிராமத்தின் திறப்பு விழா கடந்த திங்கள்கிழமை சின்னடம்பனில் நடந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கை நாடாளு மன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், மலேசிய செனட்டின் தலைவர் (சபாநாயகர்) விக்னேஸ்வரன், இங்கிலாந்து எம்.பிக்கள் ஜேம்ஸ் பெர்ரி, கீத் வாஸ், தமிழ்த் தேசிய கூட்டமைப் பின் துணைத் தலைவர்கள் மாவை சேனாதிராஜா, சுமந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புதிய வீடுகளுக்கான சாவிகளை, ஞானம் பவுண்டேஷன் நிர்வாகிகள் அல்லிராஜா சுபாஷ்கரன், ஞானாம்பிகை அல்லிராஜா, பிரேமா சுபாஷ்கரன் ஆகியோருடன் இரா.சம்பந்தன், விக்னேஸ்வரன் மற்றும் இங்கிலாந்து எம்.பி.க்களும் இணைந்து பயனாளிகளிடம் வழங்கினர்.

நிகழ்ச்சியில், இரா.சம்பந்தன் பேசியதாவது:

அரசாங்கம் செய்ய வேண்டிய ஒரு பணியை சுபாஷ்கரன் செய் திருக்கிறார். கல்வி, மருத்துவம் போன்ற இன்னும் பல துறை களிலும் தமிழர்களுக்கு உதவ அவர் முன்வந்திருப்பதற்கு நன்றி. வெளிநாடுகளில் வசிக்கும் முன்னேறிய தமிழர்கள் தாராளமாக உதவ முன்வர வேண்டும்.

நீதி நியாயத்துடன், சம உரிமை களுடன், சுயமரியாதையுடன் இந்த நாட்டில் வாழ வேண்டும் என்று கருதித்தான் ஒவ்வொரு முறையும் நாடாளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளூர் தேர்தல்களில் தமிழர்கள் வாக்களித்து வருகிறார் கள். ஆனால் ஜனநாயக ரீதியிலான நமது எதிர்பார்ப்புகள், கோரிக்கை கள் இன்னமும் அப்படியே இருக் கின்றன. புதிய அரசாங்கத்தை உருவாக்க தமிழ் மக்கள், தமிழ் பேசும் மக்கள், முஸ்லிம்கள் என அனைவரும் பெரிய பங்களிப்பு செய்திருக்கின்றனர்.

பயங்கரவாத சட்டம் நீக்கப்பட்டால், சிறைபட்டிருக்கும் இளைஞர்களுக்கு விடிவு பிறக்கும் என்கிறார்கள். அது நடக்கவில்லை. ராணுவத்திடம் சிக்கியிருக்கும் ஏராளமான நிலங்கள் திரும்பவும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட வில்லை. அது முழுமையாக நடக்க வேண்டும்.

நியாயம் கேட்டு, நீதி கேட்டு, கைதிகளை மீட்க வேண்டி, நிலங் களைத் திரும்ப ஒப்படைக்கக் கோரி, தொழிற்சாலைகள் அமைக்க வேண்டி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கேட்டு போராட் டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்த ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால் நம் மக்களுக்கான தேவைகள், எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப் படவில்லை. இனியும் தமிழ் மக்கள் காத்துக் கொண்டிருக்க முடியாது. இந்த புறக்கணிப்பு நிலை தொடரு மானால், இந்த ஆட்சியையும் விரட்ட வேண்டி வரும். இவ்வாறு இரா.சம்பந்தன் கூறினார்.

தமிழர்களின் தேவைக்கான கருத்துகளைத் தங்களது நாடுகளில் எதிரொலிக்கச் செய்வோம் என்றும், தமிழர்களின் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்பட உறுதுணையாக இருப்பதாகவும் மலேசிய செனட் தலைவர் விக்னேஸ்வரன் மற்றும் இங்கிலாந்து எம்.பி.க்கள் ஜேம்ஸ் பெர்ரி, கீத் வாஸ் ஆகியோர் உறுதி அளித்தனர்.

ரஜினி வராததால் ஏமாற்றம்

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து எம்.பி.க்கள் ஜேம்ஸ் பெர்ரி, கீத் வாஸ் மற்றும் மலேசிய செனட் தலைவர் விக்னேஸ்வரன் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கொழும்பில் இருந்து இரண்டு ஹெலிகாப்டர்களில் முள்ளியக்காவிளையில் உள்ள வித்யானந்தா கல்லூரி மைதானத்துக்கு முதலில் அழைத்து வரப்பட்டனர். அதன்பின்னர் அங்கிருந்து கார்கள் மூலம் நிகழ்ச்சி நடந்த இடமான சின்னடம்பன் கிராமத்துக்குச் சென்றனர்.

மைதானத்தில் ஹெலிகாப்டர்கள் வந்து இறங்கியதுமே, அப்பகுதியில் வசிக்கும் தமிழர்கள் ஓடி வந்து மைதானத்தை சுற்றிலும் நின்றனர். சிறப்பு வகுப்பில் இருந்த மாணவிகளும் வகுப்பறைகளை விட்டு வெளியே வந்தனர். அப்போது அங்கு குழுமியிருந்த சென்னை பத்திரிகையாளர்களிடம், ‘ரஜினி வர வில்லையா?’ என்று கேட்டனர். ‘நாங்கள் அவரை நேரில் காண ஆசைப்பட்டோம்... இனி எப்ப வருவார்?’ என்று கேட்டனர். ‘இன்றைக்கு அவர் வரவில்லை. ஆனால் பிறகு வர வாய்ப்பு இருக்கிறது’ என்று பத்திரிகையாளர்கள் அவர்களுக்கு பதிலளித்தனர்.

இதேபோல், நிகழ்ச்சி நடந்த சின்னடம்பன் கிராமத்தில் திரண்டிருந்த தமிழ் மக்களும் ரஜினியின் வருகையை எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தது தெரியவந்தது.

முள்ளியக்காவிளையில் உள்ள வித்யானந்தா கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டர் வந்திறங்கிய போது,வகுப்பறையிலிருந்து ஓடிவந்து வெளியே பார்க்கும் மாணவிகள்

வீடு வாங்க வந்த பயனாளி ஒருவரின் உறவினரான குணநாயகி என்ற இளம்பெண்ணிடம் பேசியபோது, ‘வாழ்க்கை எங்களை எல்லாக் கஷ்டத்துக்கு நடுவேயும் நகர்த்திக் கொண்டு போகிறது. எங்கள் நாட்டில் என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு விளங்கவில்லை. வெளிநாட்டில் (குறிப்பாக தமிழ்நாட்டில்) எங்கள் நிலை பத்தி என்ன நினைக்கிறார்கள் என்பதும் விளங்கவில்லை. அவர்கள் எல்லாம் எங்களுக்காக கவலைப்படுகிறார்கள்; அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார்கள் என்று மட்டும் நன்றாக விளங்குகிறது. இங்கிருந்து போன குடும்பங்கள் கொஞ்சம் முன்னேறி இருக்கின்றன. உலகம் பூரா இருக்கிற தமிழர்களிடம் இருந்து எங்களுக்கு அரசியல் கலக்காத அன்பும், பிழைப்பு நடத்துவதற்கான உதவிகளும் கிடைத்தால் போதும்’’ என்றார்.

வவுனியா அருகே சின்னடம்பன் என்ற இடத்தில் ஞானம் பவுண்டேஷன் சார்பில் கட்டப்பட்ட வீடுகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மலேசிய செனட்டின் தலைவர் விக்னேஸ்வரன், இங்கிலாந்து எம்.பி.க்கள் ஜேம்ஸ் பெர்ரி, கீத் வாஸ் ஆகியோருடன் ஞானம் பவுண்டேஷன் தலைவர் அல்லிராஜா சுபாஷ்கரன் மற்றும் நிர்வாகிகள். (உள்படம்): லைக்கா-ஞானம் கிராமத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகள்.

‘லைக்கா’வை சர்ச்சைகள் வட்டமிடுவது ஏன்?

சுபாஷ்கரன் விளக்கம்

லைக்கா நிறுவனத்துக்கும் ராஜபக்சேவுக்கும் தொடர்பு; சந்திரிகாவுடன் நட்பு பாராட்டியது; வவுனியாவில் தமிழர்களுக்காக கட்டிக் கொடுக்கப்படும் வீடுகள் முழுமையும் இவர்களால் கட்டிக் கொடுக்கப்படுபவை அல்ல. அதில் அரசுக்கும் பங்கு இருக்கிறது; ரஜினியை அழைத்துச் செல்லத் திட்டமிட்டிருந்ததில் வியாபார நோக்கம் இருக்கிறது என்பது மாதிரியான சில சர்ச்சைகள் குறித்து

‘லைக்கா’ தலைவர் சுபாஷ்கரனிடம் கேட்டோம்

சினிமா தொழிலில் இருக் கிறேன். அதுதான் எனக்கு இந்தியா வில் குறிப்பாக தமிழ்நாட்டில் அறி முகம் தந்தது. அதுவே இப்போது சர்ச்சைகளில் சிக்குவதற்கும் அடிப்படை ஆகியிருக்கிறது.

முதலில் நான் தமிழன். போர்ச் சூழல் காரணமாக பாதுகாப்பு தேடி, இளம் வயதிலேயே நாட்டை விட்டு வெளியேறியவன். லண்ட னில் இருந்தேன். துடிப்புடன் முன்னேறி இந்தளவுக்கு வளர்ந்திருக்கிறேன். இப்போது என் மண்ணில் தமிழ் மக்களுக்கு ஏதாவது ஒருவகையில் உதவத் தகுதியுள்ளவனாக என்னைக் கருதுகிறேன். எனக்கு மனம் இருந்தால் மட்டும் எதுவும் செய்து விட முடியாது. அதற்கு என் மண்ணில் இருக்கும் ஆட்சியாளர் களின் உதவி அவசியம் தேவைப் படுகிறது. அதற்காக சில ஆட்சி யாளர்களுடன் சேர்ந்து செயல்பட வேண்டியிருக்கிறது. இதைத் தொடர்பு என்றோ, நட்பு என்றோ, நெருக்கம் என்றோ பார்த்தால் நான் என்ன செய்ய முடியும்?

இந்த தருணத்தில் ஒரு விஷயத்தை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும் - ‘லைக்கா’ நிறுவனத்துக்கும் ராஜபக்சேவுக்கும் எந்தவிதமான நேரடித் தொடர்போ, மறைமுகத் தொடர்போ இல்லை என்று. ஏற்கெனவே இதைப் பல தருணங்களில் எங்களது நிறுவனம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

தொழில் போட்டியாளர்கள் சிலர் ஆங்காங்கே ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் சிலருடன் கைகோர்த்துக் கொண்டு எதிர்க் கருத்துகளைப் பரப்பி வெற்றி காண முயலுகிறார்கள். அவரவர் கருத்தை வெளிப்படுத்த எல்லோ ருக்கும் உரிமை இருப்பதால் அதுபற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படுவதில்லை. ஆனால், அரசியலில் இருக்கும் சிலர், நல்ல காரியங்களுக்கு எதிராக நிற்பதும் எங்கள் நிறுவனத்துக்கு எதிரான கருத்தைப் பரப்பி தேவையில்லாத சர்ச்சைகளுக்குள் இழுப்பதும் எங்களை வேதனைப்படுத்துகிறது.

உலக அளவில் பிரபலமிக்க ரஜினி போன்றோரை வவுனியாவுக்கு அழைத்துச் சென்று மக்களைச் சந்திக்க வைக்க நினைத் தோம். ஏனென்றால், வாழ்க்கை என்றாலே விரக்தியில் இருக்கும் தமிழ் மக்கள், ரஜினி போன்றோரை காண்பதில் பெரும் மகிழ்ச்சி கொள்வார்கள். உலக அளவில் இந்த நிகழ்ச்சி கவனம் பெறும். தமிழ் மக்களுக்கு மேலும் உதவிகள் கிடைக்கும் என்பதுதான் நோக்கம். ரஜினி என்ற பிரபலத்துடன் எனக்கு சினிமா மூலம் கிடைத்த தொடர்பை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். அவர் முன்னிலையில் தமிழ் மாணவர் களின் கல்விக்கென சில உதவி களைச் செய்ய விரும்பினேன். மற்ற படி, ரஜினியை அழைத்ததில் எந்த வியாபார நோக்கமும் இல்லை.

சில சர்ச்சைகளுக்கு பதில் சொல்வதைவிட, நேரில் அழைத்து வந்து உண்மையை அறிந்து கொள்ளச் செய்ய வேண்டும் என்பதற்காகவே சென்னை பத்திரிகையாளர்களை லைக்கா - ஞானம் கிராமத் திறப்பு நிகழ்ச்சி யில் பங்குபெறச் செய்தேன். 150 வீடுகளையும் எங்களுடைய ஞானம் பவுண்டேஷன் சார்பில் மட்டுமே கட்டிக் கொடுத்திருக் கிறோம் என்பதை அவர்கள் நேரில் பார்த்து இங்குள்ள மக்களிடம் பேசித் தெளிவு பெற்றிருப்பதில், சற்று மனநிறைவு அடைந்திருக் கிறேன். இவ்வாறு அல்லிராஜா சுபாஷ்கரன் கூறினார்.

ஞானம் பவுண்டேஷன் பற்றி...

இலங்கை உள்பட இந்தியா, பாகிஸ்தான், ருமேனியா, நைஜீரியா, சூடான், தான்சானியா, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் விதமாக அங்குள்ள சேவை அமைப்புகளுடன் கைகோர்த்து செயல்பட்டு வருகிறது ஞானம் பவுண்டேஷன் அமைப்பு. இந்த அமைப்பு 2010-ல் லைக்கா மொபைல் நிறுவனத் தலைவர் அல்லிராஜா சுபாஷ்கரனால் தோற்றுவிக்கப்பட்டது. இதில் அவருடைய தாயார் ஞானாம்பிகை அல்லிராஜா மற்றும் மனைவி பிரேமா சுபாஷ்கரன் ஆகியோர் நிர்வாகிகளாக உள்ளனர்.

இயற்கை பேரிடர் மற்றும் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் வாழ்வு நிலையை கருத்திற்கொண்டு இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுகாதாரம், கல்வி, வாழ்விடம் உள்ளிட்ட முக்கியமான தேவைகளுக்கு கடந்த 2010-ம் ஆண்டு முதலே பெரிதும் உதவி வருகிறது இந்த அமைப்பு.

வவுனியாவில் இருந்து வே.வெங்கடேஸ்வரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x