

உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க தூதரங்களில் பணியாற்றும் அந்தந்த நாடுகளின் மக்களுக்கு உள்ளூர் சட்டப்படியே சம்பளம் வழங்கப்படுகிறது என்று அமெரிக்கா கூறியுள்ளது.
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் தூதரக அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்றும் இந்தியர்களுக்கு, குறைந்த சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அமெரிக்காவில் பணியாற்றும் இந்திய தூதரக அதிகாரி தேவயானி கோப்ரகடே, விசா மோசடி குற்றச்சாட்டில் கடந்த 20ம் தேதி கைது செய்யப்பட்ட பிறகு, இந்த விவகாரம் எழுந்தது.
அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தங்கள் பணியாளர்களுக்கு நாள் அடிப்படையில் இல்லாமல், மணி அடிப்படையில் சம்பளம் வழங்கவேண்டும் என அமெரிக்கா கூறுகிறது. நியூயார்க் உள்ளிட்ட அமெரிக்க நகரங்களில், தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச கூலியாக மணிக்கு 9.47 டாலர் வழங்கப்படவேண்டும் என்கிறது அந்நாட்டு சட்டம்.
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் தூதரக அதிகாரிகளின் வீடுகள் அமெரிக்க எல்லைக்குட்பட்டதாக கருதப்படுகிறது. இந்நிலையில், இங்கு பணியாற்றும் டிரைவர், சமையலர் போன்ற இந்திய ஊழியர்களுக்கு மாதம் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. இது 200 முதல் 250 அமெரிக்க டாலர்களுக்கு சமமாகும். இத்தொகை அந்நாட்டின் குறைந்தபட்ச கூலியை விட குறைவாகும்.
இந்நிலையில் அமெரிக்காவின் குறைந்தபட்ச கூலிச் சட்டத்தை இங்குள்ள அமெரிக்க அதிகாரிகள் மீறியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் நேற்று கூறுகையில், “வெளிநாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பணியாற்றும் உள்ளூர் ஊழியர்களுக்கு, அந்தந்த பகுதிகளில் நிலவும் சம்பளமே வழங்கப்படும். தொழிலாளர் சம்பளம் தொடர்பாக அந்தந்த நாடுகளில் உள்ள சட்டத்தை மீறாத வகையில் இந்த சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது” என்றார்.