

ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் பயிற்சி பெற்ற மலேசிய இளைஞர்கள், நாடு திரும்பி அந்த அமைப்பின் கொள்கைகளைப் பரப்ப முயல்வதாக கிடைத்த தகவலை அடுத்து, பயங்கரவாதத்துக்கு எதிராக புதிய சட்டமியற்ற அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக மலேசிய பிரதமர் நஜிப் ரஸாக் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிக் ஸ்டேட் எனப்படும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு பெரும்பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அந்த அமைப்பில் இணைந்த 39 மலேசிய இளைஞர்கள், நாடு திரும்பி மலேசியாவில் ஐஎஸ் அமைப்பின் கொள்கைகளைப் பரப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நஜிப் ரஸாக் பேசியதாவது:
ஐஎஸ் தீவிரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள, தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லை. இந்த வெள்ளை அறிக்கையானது, பயங்கரவாத அச்சுறுத்தல்களை ஒடுக்க தற்போதுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் (சிறப்பு அளவீடுகள்) சட்டம் போன்றவற்றுக்கு கூடுதல் வலுவூட்ட வேண்டும் எனப் பரிந்துரைக்கிறது.
ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகளின் கொள்கைகளுக்கு மக்கள் செவிசாய்க்கமாட் டார்கள் என நம்புகிறேன். மதவாதம், தீவிரவாதம், பயங்கரவாதம் போன்றவற்றுக்கு எதிரான நடவடிக்கை களுக்காக சர்வதேச சமூகத்துக்கு மலேசியா ஒத்துழைப்பு அளிக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த வெள்ளை அறிக்கை 19 பக்கங்கள், 12 பக்க இணைப்பு அறிக்கை, ஐ.எஸ். பயங்கரவாதிகளின் புகைப்படம், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தேவைப்படும் பகுதிகள் உள்ளிட்ட விவரங்களுடன் தாக்கல் செய்யப்பட்டது. தீவிரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் 19 பேர் போதிய ஆதாரமில்லாததால், தண்டனையிலிருந்து தப்பி விட்டனர். எனவே, இது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.