

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் சவுதி அரேபியா சுற்றுப்பயணம் திருப்புமுனை வாய்ந்தது என்று அந்நாட்டு அரசர் சல்மான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபராக பதவியேற்று முதல் சர்வதேச சுற்றுப்பணமாக சவுதி அரேபியா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த சனிக்கிழமை சவுதி அரேபியாவுக்குச் சென்ற ட்ரம்ப் பல்வேறு நிக்ழ்ச்சிகளில் பங்கேற்றார்.
இந்த நிலையில் ட்ரம்ப்பின் சவுதி அரேபிய பயணம் குறித்து அந்நாட்டு அரசர் சல்மான் அமைச்சரவை கூட்டத்தில் உரையாற்றினார் அதில், "ட்ரம்பின் சவுதி அரேபிய பயணம் சவுதி - அமெரிக்கா இரு நாடுகளுக்கு திருப்புமுனை வாய்ந்தது. இரு நாடுகளுக்கு இடையேயான உறவுமுறை ஒத்துழைப்பு, ஆலோசனைகள், ஒருங்கினைந்த செயல்பாடு மூலம் மேலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சவுதி மற்றும் அமெரிக்கா இடையேயான ஒப்பந்தங்கள் தீவிரவாதத்துக்கு எதிரான உறுதியான நடவடிக்கைகளை எடுக்கும்" என்றார்.
ட்ரம்ப் தனது சவுதி அரேபிய பயணத்தில், "மதத்தின் பெயரில் நடக்கும் வன்முறைகளுக்கு எதிராக இஸ்லாம் தலைவர்கள் தங்களது நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இது நன்மைக்கு தீமைக்கு இடையே நடக்கும் போர்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.