

இலங்கையில் அரசுப் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போரின்போது காணாமல் போனவர்கள் குறித்த புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
போரின்போது காணாமல் போனவர்கள் குறித்து விசாரிக்க இலங்கை அதிபர் ராஜபக்ச உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற நீதிபதி மேக்ஸ்வெல் பரனகாமா தலைமையில் குழு அமைக்கப்பட்டது.
விடுதலைப் புலிகளின் முக்கிய பகுதியாக இருந்த முல்லைத் தீவில் இக்குழுவினர் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களை கடந்த 4 நாட்களாக சேகரித்தனர். அப்போது போரின்போது காணாமல் போன நபர்கள் குறித்து எதிர்பார்த்ததை விட ஏராளமான புகார்கள் வந்துள்ளன.
விடுதலைப் புலிகள் வீழ்த்தப்பட்ட பிறகு அவர்கள் ஆதிக்கத்தில் இருந்த பகுதியில் காணாமல் போனவர்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. முல்லைத் தீவு பகுதியில்தான் அதிக அளவு புகார் பெறப்பட்டுள்ளது. முல்லைத் தீவு பகுதிதான் விடுதலைப் புலிகளின் ராணுவ தலைமையகமாக இருந்தது.
இக்குழு நவம்பர் 2-ம் தேதி முதல் இப்போது வரை 8 முறை பொதுமக்களை சந்தித்து புகார்களை பெற்றுள்ளது. மொத்தம் 19,500 பேரை காணவில்லை என புகார்கள் பெறப்பட்டுள்ளன. கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார், மட்டகளப்பு, முல்லைத்தீவு உள்ளிட்ட தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இக்குழவினர் தகவல்களை சேகரித்து வருகின்றனர்.
2013-ல் ஆகஸ்ட் மாதம் இக்குழுவை அதிபர் ராஜபக்ச அமைத்தார்.