

தென்னாப்பிரிக்காவின் தேசத் தந்தை நெல்சன் ரோலிஹ்லாலா மண்டேலா (95) வியாழக்கிழமை இரவு காலமானார். அவரது மறைவை அந்த நாட்டின் அதிபர் ஜேக்கப் ஜுமா அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
கடந்த பல ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த மண்டேலா, நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஜூன் மாதம் முதல் தொடர்ந்து மூன்று மாதங்கள் ஜோகன்னஸ்பர்க் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
செப்டம்பரில் அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்பினார். இதை தொடர்ந்து ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள அவரது வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை இரவு 8.50 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. அப்போது அவரது மனைவி கிரேசா மேச்சல் உள்பட குடும்ப உறுப்பினர்கள் அருகில் இருந்தனர்.
இந்த சோகமான செய்தியை அதிபர் ஜேக்கப் ஜுமா உடனடியாக அறிவிக்கவில்லை. சில மணி நேரத்துக்குப் பின்னரே அவர் செய்தியாளர்களை அழைத்து மண்டேலா மறைவுச் செய்தியை அறிவித்தார்.
இறுதிச் சடங்கு ஏற்பாடுகள்
மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தென்னாப்பிரிக்காவின் அனைத்து அரச அலுவலகங்களிலும் அந்தநாட்டு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது. அவருக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக அரசு சார்பில் தனியாக இரண்டு இணையதளங்களும் தொடங்கப்பட்டுள்ளன. இதனிடையே இறுதிச் சடங்குதொடர்பாக ஆலோசிக்க தென்னாப்பிரிக்க நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டமும் விரைவில் நடைபெற உள்ளது.
மண்டேலாவின் இறுதிச் சடங்கு சுமார் ஒரு லட்சம் பேர் அமரக்கூடிய ஜோகன்னஸ்பர்க் ஸ்வெட்டோ கால்பந்து மைதானத்தில் டிசம்பர் 15-ம் தேதி நடைபெறும் என்று தெரிகிறது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன், போப்பாண்டவர் பிரான்சிஸ், திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமா உள்ளிட்ட உலகத் தலைவர்கள், ஆன்மிகத் தலைவர்கள் பலர் இறுதிச் சடங்கில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகம் முழுக்க மண்டேலாவுக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், மண்டேலாவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து எடுக்கப்பட்ட அவரது சொந்த கிராமத்தின் புகைப்படத்தை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
ஆரம்ப கால வாழ்க்கை
தென்னாப்பிரிக்காவின் டிரான்ஸ்கி பகுதியில் மேவிசோ கிராமத்தில் நோன்குவாப்கி நோஸ்கேனி- நிகோஸி மேப்ராகான்யிஸ்வா காட்லா மண்டேலா ஆகியோரின் மகனாக 1918 ஜூலை 18-ல் பிறந்தார் நெல்சன் மண்டேலா. அவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் ரோலிஹ்லாலா மண்டேலா. இதில் மண்டேலா என்பது தாய்வழி மரபு பெயர். ரோலிஹ்லாலா என்பதற்கு கலகக்காரன் என்று அர்த்தமாம்.
அந்தப் பிராந்தியத்தின் தெம்பு இன மன்னரின் முதன்மை ஆலோசகராக மண்டேலாவின் தந்தை பணியாற்றினார். மண்டேலாவுக்கு 9 வயதானபோது அவரது தந்தை எதிர்பாராதவிதமாக காலமானார். இதை தொடர்ந்து மண்டேலாவை தத்தெடுத்துக் கொண்ட தெம்பு மன்னர், தனது பராமரிப்பில் வளர்த்தார். கியூனு பகுதியில் உள்ள ஆரம்பப் பள்ளியில் மண்டேலா சேர்க்கப்பட்டார். அங்கு பணியாற்றிய ஆசிரியர்கள் கிறிஸ்தவ முறைப்படி அவருக்கு நெல்சன் என்று பெயரிட்டனர்.
பள்ளிப் படிப்புக்குப் பின்னர் போர்ட் ஹாரி பல்கலைக்கழகத்தில் இளநிலைப் பட்டப் படிப்பில் சேர்ந்தார். அப்போது மாணவர் போராட்டத்தில் பங்கேற்ற அவரை பல்கலைக்கழக நிர்வாகம் வெளியேற்றியது. இதையடுத்து தென்னாப்பிரிக்க பல்கலைக்கழகத்தில் பி.ஏ. முடித்த அவர் முதுகலைப் படிப்புக்காக போர்ட் ஹாரி பல்கலைக்கழகத்தில் மீண்டும் சேர்ந்தார்.
இதனிடையே தெம்பு மன்னர், தனது வளர்ப்பு மகன் மண்டேலாவுக்கு பெண் பார்த்து திருமணம் முடிக்க ஏற்பாடு செய்தார். இதை விரும்பாத மண்டேலா, ஜோகன்னஸ்பர்க் நகருக்கு தப்பியோடி வந்துவிட்டார். அங்கு நிலக்கரி சுரங்க பாதுகாப்பு அதிகாரி உள்பட பல்வேறு வேலைகளில் சேர்ந்து பணியாற்றினார். இதன்பின்னர் 1948-ல் விட்வாட்டர்ஸ்ராண்ட் பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் சேர்ந்தார். ஆனால் படிப்பை நிறைவு செய்யவில்லை.
இதன்பின்னர் தனது சிறைவாசத்தின்போது 1989-ல்தான் அவர், தென்னாப்பிரிக்க பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்து எல்எல்பி பட்டம் பெற்றார்.
திருமண வாழ்க்கை
தனது அரசியல் வாழ்வின் தொடக்கத்தில் 1944-ம் ஆண்டில் எவிலின் மாசே என்ற செவிலியரை மண்டேலா மணந்தார். அவர்களுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் பிறந்தனர். 1955-ல் பிரிந்த அவர்கள் 1958-ல் முறைப்படி விவாகரத்து பெற்றனர். 1958-ல் சமூகசேவகர் வின்னியை 2-வதாக திருமணம் செய்தார். அவர்களுக்கு 2 மகள்கள் பிறந்த னர். அந்தத் திருமண உறவும் நீடிக்கவில்லை. 1996-ல் அவர்கள் விவாகரத்து பெற்றனர். பின்னர் 1998-ல் தனது 80-வது பிறந்த நாளில் கிரேசா மேச்சலை திருமணம் செய்தார்.
அரசியல் சகாப்தம்
1942 முதலே மண்டேலா அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். எனினும் 1944-ல் தான் அவர் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸில் முறைப்படி சேர்ந்தார். தென்னாப்பிரிக்காவை ஆண்ட நிறவெறி அரசுக்கு எதிராக தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார். பல்வேறு போராட்டங்களில் கைது செய்யப்பட்டார். 1952-ம் ஆண்டில் அவர் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து கைது, வழக்கு, விடுதலை என அவரது வாழ்க்கை போராட்டக்களமானது.
1960 மார்ச் 21-ல் ஷார்ப்வில்லே பகுதியில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 69 அப்பாவிகள் உயிரிழந்தனர். அதுவரை அமைதி வழியில் போராடிய மண்டேலா அன்றுமுதல் கொரில்லா யுத்த முறையில் ஆயுதப் போராட்டத்தையும் தொடங்கினார். இந்நிலையில் 1956-ல் தேசத் துரோக குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு 4 ஆண்டுகள் வரை நடைபெற்றது. 1962-ல் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறியதாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 5 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார்.
1964-ல் ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்ததாகக் கைது செய்யப்பட்ட அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக 27 ஆண்டுகள் மண்டேலா சிறைவாசம் அனுபவித்துள்ளார். மக்கள் எழுச்சி, உலக நாடுகளின் நெருக்குதல் காரணமாக 1990-ல் அவர் விடுதலை செய்யப்பட்டார். அப்போது அவருக்கு வயது 71. அவரது தன்னலமற்ற தியாகத்தைப் பாராட்டி 1993-ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.
80 ஆண்டுகால நிறவெறி ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்த தென்னாப்பிரிக்காவில் முதல்முறையாக நடைபெற்ற பொதுத்தேர்தலில் அமோக வெற்றி பெற்று முதல் கறுப்பின அதிபராக 1994-ல் மண்டேலா பதவியேற்றார். 1999-ல் பதவிக் காலம் முடிந்த பின்னர் அவர் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடவில்லை.
பொதுசேவைகளில் தீவிரமாக ஈடுபட்ட அவருக்கு 2001-ல் விரைப்பை புற்றுநோய் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அதன்பின் 2004-ல் அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இறுதியாக 2010-ல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் தொடக்கவிழாவில் அவர் பங்கேற்றார். அதன் பின்னர் பொதுநிகழ்ச்சிகளில் அவர் அதிகம் பங்கேற்கவில்லை.
“ஒரு உயிர் எப்போது விடுதலை பெறுகிறதோ அப்போதுதான் அது மனிதனாகிறது. விடுதலையை யாராலும் கொடுக்க முடியாது. போராடித்தான் பெற்றாக வேண்டும்” என்ற நெல்சன் மண்டேலாவின் வைர வரிகள் அவரது மறைவுக்குப் பின்னும் ஓங்கி ஒலிக்கிறது.
அறவழியில் போராடி 27 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த அவர், மகாத்மா காந்தி, மார்ட்டின் லூதர் சிங் வரிசையில் உலக வரலாற்றில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார்.