

மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் 1982-ல் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது கொல்லப்பட்ட 163 பேரின் சடலங்கள் அவர்களது உறவினர்களிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டாஸ் எர்ரெஸ் கிராம மக்கள், தங்கள் அன்புக்குரியவர்களின் சடலம் அடங்கிய சவப்பெட்டியை கண்ணீருடன் பெற்றுக்கொண்டு தங்கள் ஊரில் உள்ள சுடுகாட்டுக்குக் கொண்டு சென்றதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கவுதமாலாவில் கடந்த 1960ல் உள்நாட்டுப் போர் வெடித்தது. 36 ஆண்டுகள் நடைபெற்ற இந்தப் போரில் சுமார் 2 லட்சம் பேர் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போயினர் என 1999-ல் வெளியான ஐ.நா. ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் சர்வாதிகாரியான எப்ரெய்ன் ரியோஸ் மான்ட் தலைமையிலான ராணுவ ஆட்சியின்போது, ராணுவத்துக்கு சொந்தமான 40 துப்பாக்கிகளை கொரில்லா படையினர் திருடிச் சென்றனர். இதை மீட்கும் பணியில் ஈடுபட்ட ராணுவம், கொரில்லா படையினருக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறி டாஸ் எர்ரெஸ் கிராம மக்கள் மீது தாக்குதல் நடத்தியது.
கடந்த 1982-ம் ஆண்டு டிசம்பர் 6 முதல் 8-ம் தேதி வரையில் நடைபெற்ற இந்தத் தாக்குதலில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 201 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக, மான்ட் மீது மனிதப்படுகொலை வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இறந்தவர்களின் சடலங்களைத் தோண்டி எடுத்து ஆய்வு செய்ததில் 5 வீரர்களுக்கு தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களுக்கு 6 ஆயிரம் ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. கவுதமாலாவில் அதிகபட்ச சிறை தண்டனை 50 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்டின் ராணுவ வீரர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது அதுவே முதன்முறை.