Published : 26 Jun 2016 11:49 AM
Last Updated : 26 Jun 2016 11:49 AM

உலக மசாலா: எடையை எடையால் கரைக்கும் புதிய டெக்னிக்

“நான் 115 கிலோ எடையுடன் இருந்தேன். என் ஆரோக்கியத்தை நினைத்துக் கவலை வந்துவிட்டது. எடை குறைப்பு மாத்திரைகளை நான் விரும்பவில்லை. உடற்பயிற்சியிலேயே எடையைக் கரைக்க முடிவு செய்தேன். முதலில் 15 கிலோ எடை கொண்ட ஒரு கல்லைச் சுமந்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எடையை அதிகரித்து, 30 கிலோ எடையுடன் நடந்துகொண்டிருக்கிறேன். தற்போது தினமும் 3 கி.மீ. தூரத்துக்கு 40 கிலோ பாறையுடன் நடக்க ஆரம்பித்திருக்கிறேன்.

என்னுடைய இந்தச் செயல் மிகத் தாமதமாகத்தான் வெளியுலகத்துக்குத் தெரிய வந்திருக்கிறது. கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறேன்’’ என்கிறார் காங் யான். இவரின் விநோத உடற்பயிற்சி குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்துகள் குவிந்து வருகின்றன. சீன இளைஞர் ஒருவர் வெளியிட்டுள்ள பதிவில், இப்படி எடை சுமந்தால் கழுத்து வலி வந்துவிடும் என்று எச்சரித்துள்ளார். மற்றொரு இளைஞர் தனது பதிவில், இவர்தான் உண்மையான இரும்பு தலை மனிதன் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

சீனாவின் ஜிலின் பகுதியில் வசிக்கிறார் 54 வயது காங் யான். இவரது உடற்பயிற்சி, இன்று உலகம் முழுவதும் தலைப்புச் செய்திகளில் வெளிவந்துவிட்டது! தினமும் நடைப் பயிற்சியின்போது 40 கிலோ எடை கொண்ட பாறையைத் தலையில் வைத்துக்கொண்டு செல்கிறார். கடந்த 3 ஆண்டுகளில் 30 கிலோ எடை குறைந்து விட்டதாகச் சொல்கிறார். தினமும் ஜிலின் பகுதியில் உள்ள பூங்காக்கள், நடை பாதைகள், கோயில்களில் தலையில் பாறையுடன் நடக்கும் காங் யானை எல்லோரும் பார்க்கலாம். சாலையில் நடப்பது மட்டுமன்றி, மலை உச்சியில் உள்ள கோயில்களின் படிக்கட்டுகளில் தலையில் எடையுடன் ஏறி இறங்குகிறார். இப்படி நடப்பதாலேயே இவர் மிகப் பிரபலமாகிவிட்டார்.

எடையை எடையால் கரைக்கும் புதிய டெக்னிக்!

*

நாம் நினைத்த வண்ணத்தை கொண்டுவரக்கூடிய ஹைடெக் பேனா உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆப்பிளின் சிவப்பையோ, ரோஜாவின் மஞ்சளையோ அப்படியே கொண்டு வர வேண்டும் என்றால், ஹைடெக் பேனாவை பொருட்களுக்கு அருகில் கொண்டு செல்ல வேண்டும். பேனாவில் உள்ள ஸ்கேனர், நிறத்தை ஸ்கேன் செய்துகொள்ளும். பேனாவை தாளிலோ, ஸ்மார்ட்போனிலோ வைத்து வரைய ஆரம்பித்தால் அதே வண்ணம் வந்துவிடும். உலகிலேயே வண்ணம் எடுக்கக்கூடிய முதல் பேனா இதுதான்!

பொருட்கள், ஆடைகள், தோல் என்று எந்த நிறத்தையும் இந்த பேனாவால் ஸ்கேன் செய்துகொள்ள முடியும். ஒரு செடியில் உள்ள இலைகளையும் பூக்களையும் ஸ்கேன் செய்து ஓவியத்தில் வண்ணம் தீட்டினால், நிஜ செடியைப் பார்ப்பது போலவே இருக்கும். இந்த வண்ணங்கள் நீரில் கரைந்து போவதில்லை. ஸ்மார்ட்போன், டேப்லட்களில் பயன்படுத்தும் பேனா, தாளில் பயன்படுத்தும் பேனா என்று 2 விதங்களில் ஹைடெக் பேனாக்கள் கிடைக்கின்றன. ஒருமுறை சார்ஜ் செய்தால் 7 மணி நேரத்துக்கு இந்த பேனாவைப் பயன்படுத்த முடியும். ஒரு பேனாவின் விலை 17 ஆயிரம் ரூபாய்.

அட! வண்ணம் நகலெடுக்கும் பேனா!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x