Published : 01 Nov 2014 09:53 am

Updated : 01 Nov 2014 10:06 am

 

Published : 01 Nov 2014 09:53 AM
Last Updated : 01 Nov 2014 10:06 AM

ஆமாம், நான் தன்பாலின சேர்க்கையாளர்தான்!- ஆப்பிள் தலைவரின் வாக்குமூலம்

உலகெங்கிலும், தன்பாலினச் சேர்க்கையாளர்கள் தங்கள் உரிமைக்காகப் போராடிவரும் நிலையில், அதை சட்டப்பூர்வமாக உலக நாடுகள் சில அங்கீகரித்தும், பல எதிர்த்தும் வருகின்றன. இந்நிலையில், உலகம் முழுவதும் இளைஞர்களைக் கவர்ந்த ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ’ஆப்பிள்’ கம்பெனியின் சி.இ.ஓ.-வான-டிம் குக் என்று அழைக்கப்படும் திமோதி குக் (53), தான் ஒரு தன்பாலினச் சேர்க்கையாளர்தான் என்பதை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில், 32 மாநிலங்களில் மட்டுமே தன்பாலினத் திரு மணம் சட்டப்பூர்வமாக அங்கீகரிப் பட்டுள்ளது. இன்னபிற மாநிலங் களில் தினமும் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. டிம் குக்கின் இந்த முடிவை விவாதக் களமாக்கி உலக ஊடகங்கள் தலைப்புச் செய்தி யாக்கிவரும் நிலையில், இளைய தலைமுறையின் மற்றொரு புகலிடமான பேஸ்புக் நிறுவனத்தின் தலைவரான மார்க் ஸக்கர்பெர்க், டிம் குக்கிற்குத் தனது ஆதரவினைத் தெரிவித்துள்ளார்.


அமெரிக்க ஊடகங்களிற்கு டிம் குக் அளித்துள்ள இந்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது: என் தொழில் வாழ்க்கையையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் எப்பொழுதுமே நான் தொடர்புபடுத்தியது இல்லை. எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்த எனக்கு, எப்பொழுதுமே என்னைப் முன்னிலைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது இல்லை. அதேசமயம், என் தனிப்பட்ட வாழ்க்கையை அந்த ரங்கமாகவே வைத்திருக்க வேண்டும் என்ற எனது ஆர்வம், முக்கியமான வேறு சில பொது விஷயங்களின் மீதான எனது பங்களிப்பைக் குறைப்பதாக உணர்கின்றேன்.

ஒரு தன்பாலினச் சேர்க் கையாளன் என்பதை நான் ஒருபொழுதும் மறுத்ததில்லை.. பகிரங்கமாக ஒப்புக் கொண்டதுமில்லை. ஆனால், இப்படி இருப்பதில் நான் பெருமைக்கொள்கிறேன்.

கடவுள் கொடுத்த வரமாகவும் அதை நான் கருதுகிறேன். இருப்பினும், நான் தன் பாலினச் சேர்க்கையாளர் என்பதை, ஆப்பிள் நிறுவனத்திலேயே பலர் நன்கு அறிவார்கள். அதனால், என் மீதான அவர்களது பார்வை, இதனால் எந்த விதத்திலும் மாறிவிடவில்லை. தன்பாலினச் சேர்க்கையாளராக இருப்பதன் மூலமாக, இதுபோன்ற சிறுபான்மை தரப்பினரின் வாழ்க் கையில் ஏற்படும் அவமானங்களையும், சவால் களையும் மனப்பூர்வமாக என்னால் புரிந்து கொள்ள முடிந்திருக்கிறது. சில நேரங்களில், நெருக்கடியையும், சங்கடங்களையும் எதிர்கொள் ளும்படி இருந்தாலும், இது போன்ற ஒரு மிகப்பெரும் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர்கள் - சில சமயம் உணர்ச்சி அற்றவர்களாக காணப்படுவதற்கான - ’தடித்த’ தோலை இது எனக்கு அளித்திருக்கிறது.

கடந்த நூற்றாண்டில் நம் உலகம் எத்தனையோ மாறுதல்களைச் சந்தித்திருக்கிறது. ஆனாலும், பல நிறுவனங்களில், இன்னும் பாலினச் சேர்க்கையின் அடிப்படையில் மட்டுமே பணியாளர்களை வேலையை விட்டு நீக்கும் நிலைமையைப் பார்க்கமுடிகிறது.

என்னை ஒரு சமூகப் போராளியாக நான் அடையாளம் கொள்ளவில்லை. ஆனால் என்னுடைய இந்த வளர்ச்சிக்குள் பலரின் தியாகங்கள் ஒளிந்தி ருக்கின்றன. உலகில் ஆதர வற்று, தனியாகத் தவிக்கும் ஏதாவதொரு தன்பாலினச் சேர்க்கையாளருக்கும் இந்தச் செய்தி ஆறுதலைக்கொடுத்தால், அதுவே எனக்கும், இந்தச் சிறுபான்மை குழுவிற்கும் கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன். இவ்வாறு டிம் குக் கூறியுள்ளார்.

தகவல் தொழில் நுட்பத் துறையில் முன்னணியில் உள்ள ‘கூகுள்” உள்ளிட்ட நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் சிலர், தங்களை தன்பாலின சேர்க்கையாளர்களாக ஏற்கெனவே பிரகடனப்படுத்தி உள்ள நிலையில், முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் பலவும், தன்பாலின சேர்க்கையாளர்களாக உள்ள ஊழியர்களுக்கு சில சலுகைகளை அளித்து, ஆதரவு காட்டி வருவதும் குறிப்பிடத் தக்கது. இந்நிலையில்தான், ஃபேஸ்புக் தலைவரான மார்க் ஸக்கர்பெர்க், ‘ஆப்பிள்’ நிறுவன தலைவரின் அறிக்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

உலகின் மற்றொரு முன்னணி நிறுவனமான கோல்ட் மேன் சாக்ஸின் தலைமை நிர்வாகியும், தன்னை தன்பாலின சேர்க்கை ஆதரவாளர் என்று முன்பே அறிவித்து கடும் சர்ச்சைக்கு உள்ளானவருமான லாயிட் பிளாங்க்ஃபெயின், ‘’அநீதிக்கும் அடக்குமுறைக்கும் ஆளாகிவரும் தன் பாலின சேர்க்கையாளர்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைக் கொண்டு வரும் ஒரு மைல் கல்லாக டிம் குக்கின் இந்த துணிச்சலான அறிவிப்பு விளங்கும்” என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


தன்பாலின உறவு'ஆப்பிள்' தலைவரின் வாக்குமூலம்டிம் குக்கோல்ட் மேன் சாக்ஸ்லாயிட் பிளாங்க்ஃபெயின்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author