Last Updated : 24 Jun, 2016 03:15 PM

 

Published : 24 Jun 2016 03:15 PM
Last Updated : 24 Jun 2016 03:15 PM

பிரெக்ஸிட் விவகாரம்: வென்றவர்களும் தோற்றவர்களும்!

28 நாடுகள் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற ஆதரவாக பிரிட்டன் வாக்களித்ததையடுத்து பல்வேறு தரப்பு வெற்றிகளும், தோல்விகளும் அலசப்பட்டு வருகின்றன.

தோல்வியடைந்தவர்கள்:

டேவிட் கேமரூன்:

பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் நீடிப்பதற்கான தீவிர ஆதரவாளர். வாக்கெடுப்பில் வெளியேற சாதகமாக வாக்குகள் விழுந்தால் கேமரூன் நீடிக்கமாட்டார் என்பது முன்பே கணிக்கப்பட்டதாகும். ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகினால் ஏற்படும் பொருளாதார இடர்ப்பாடுகளை ,கேமரூன் சுட்டிக்காட்டி வந்தார்.

இந்நிலையில், தனது விருப்பத்துக்கு விரோதமாக வாக்குகள் பிரிட்டன் வெளியேற ஆதரவாக விழுந்ததால் பிரதமர் பதவியிலிருந்து விலக அவர் முடிவெடுத்துள்ளார்.

இந்நிலையில் பிரெக்ஸிட் ஆதரவு பிரச்சாரகர்கள் 84 பேர் கேமரூன் பதவியில் நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் விலக ஆதரவு கிட்டியிருக்கும் செய்தியை அடுத்து பங்குச்சந்தைகள் சரிவு கண்டன. இந்நிலையில் கேமரூன் பதவியில் நீடித்தால் மட்டுமே இந்நிலைமைகள் சீரடையும் என்று பலரும் கருதுகின்றனர்.

ஜார்ஜ் ஆஸ்பர்ன்:

டேவிட் கேமரூனின் தனிப்பட்ட மற்றும் அரசியல் கூட்டாளியாவார் ஜார்ஜ் ஆஸ்பர்ன். பிரெக்ஸிட் விவகாரத்தினால் ஏற்படும் பொருளாதார நசிவுகள் குறித்து எச்சரித்தபடியே இருந்தார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு ஆதரவாக பேசுபவர்கள் பொருளாதார அறிவற்றவர்கள் என்று இவர் சாடினார். இதனால் கட்சியில் பல நண்பர்களையும் அவர் இழந்தார்.

ஜெரெமி கோர்பின்:

முக்கிய எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் தலைவராவார், இவர் ஐரோப்பிய யூனியனில் நீடிக்க வேண்டும் என்ற தனது ஆதரவை அரைகுறையாக மேற்கொண்டதற்காக பரவலாக விமர்சிக்கப்பட்டவர். பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாக வாக்களிக்க தொழிலாளர் கட்சியினர் எடுத்த முடிவுக்காக ஜெரெமி கோபின் மீது நிச்சயம் விமர்சனங்கள் எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றி பெற்றவர்கள்:

போரிஸ் ஜான்சன்:

முன்னாள் லண்டன் மேயரான போரிஸ் ஜான்சன் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது அவசியம் என்று கடுமையாக பிரச்சாரம் மேற்கொண்ட தீவிர பிரிட்டன் எக்சிட் ஆதரவாளர். இவரது ஆளுமையும் வழக்கத்துக்கு மாறான இவரது அரசியல் அணுகுமுறையும் வாக்காளர்களிடம் கடும் செல்வாக்கு செலுத்தியது, சரியில்லாத பல காரணங்களுக்காக இவர் பெயரும், கருத்துகளும் தலைப்புச் செய்திகளில் கவனம் பெற்றன.

ஐரோப்பிய ஒன்றியம் ஒரு சூப்பர்ஸ்டேட்டை உருவாக்க ஹிட்லர் போல் செயல்படுகிறது என்ற இவரது வாதம் பரந்துபட்ட விமர்சனங்களை ஈர்த்தது. கேமரூனுக்குப் பதிலாக இவர் பிரதமர் நாற்காலியில் அமர வேண்டும் என்று பலதரப்பினரும் இவரை விரும்பினர். பிரதமர் நாற்காலிதான் இவரது குறி, ஐரோப்பிய ஒன்றிய விவகாரம் அதற்கான ஒரு கருவியே என்று இவரை விமர்சகர்கள் சாடினர்.

நிஜெல் ஃபராஜ்:

யு.கே.சுதந்திரா கட்சியின் தலைவரான இவர் 25 ஆண்டுகளாக ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேற வேண்டும் என்று தீவிர பிரச்சாரம் மேற்கொண்டவர். குடியேற்றத்துக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் இவர் மேற்கொண்ட தீவிர பிரச்சாரத்திற்கு பெருகிய ஆதரவினால் டேவிட் கேமரூன் 3 ஆண்டுகளுக்கு முன்பே வாக்கெடுப்பை நடத்த நெருக்கப்பட்டார்.

மைக்கேல் கோவ்:

நீதித்துறை அமைச்சரும், இப்போது வரை டேவிட் கேமரூனின் நம்பிக்கையாளராக கருதப்படுபவர் மைக்கேல் கோவ். இவர் ஐரோப்பிய யூனியனிலேயே நீடிக்கும் கேமரூனின் வாதத்தை எதிர்த்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x