Published : 18 Nov 2014 08:51 AM
Last Updated : 18 Nov 2014 08:51 AM

ஜி-20 மாநாட்டின் கதாநாயகன் நரேந்திர மோடி

சற்றொப்ப பத்தாண்டுகளுக்கு, சர்வதேச சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட இந்திய அரசியல்வாதி நரேந்திர மோடி. குஜராத்துக்கு வெளியே அவருக்குக் கிடைத்ததெல்லாம் கண்டனங்கள்தான்; தொடங்கிய காலத்திலேயே கருகிவிடும் அவருடைய அரசியல் வாழ்வு என்றே பலராலும் கணிக்கப்பட்டது. விசா தருவதற்கு மறுத்தது அமெரிக்கா. எங்கள் நாட்டுக்கு வரவேண்டாம் என்று பிரிட்டனும் பல ஐரோப்பிய நாடுகளும் அறிவித்தன.

2002 பிப்ரவரியில், கோத்ரா நகரில் நடந்த கர சேவகர்கள் எரிப்பு சம்பவத்துக்குப் பிறகு வகுப்புக் கலவரங்களைத் தடுக்கத் தவறியதற்காக, அல்லது கலவரங்களை அனுமதித்ததற்காக மற்றவர்களால் சமூகப் புறக்கணிப்புக்கு ஆளானார். அந்தக் கலவரங் களில் ஏராளமான முஸ்லிம்கள் உள்பட ஆயிரத் துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தன் மீதான குற்றச்சாட்டுகளை மோடி மறுத்தார். குற்றம் சுமத்தியவர்களால் ஆதாரங்களுடன் நிரூபிக்க முடியவில்லை. அந்தக் கலவரத்தில் மக்கள் சாவதை அவர் தடுக்கவில்லை அல்லது அவரால் தடுக்க முடியவில்லை என்பது வெளிப்படை. அன்றிலிருந்து அவர் மீதான குற்றச்சாட்டுகளே எல்லோருடைய மனங்களிலும் மேலோங்கி நிற்கின்றன.

ஜி-20 அமைப்பின் மாநாட்டுக்கு வந்தபோது பிரதமர் மோடிக்குக் கிடைத்த வரவேற்பு, ஒரு ‘ராக் ஸ்டாருக்கு’ அளிக்கப்படும் வரவேற்பைப் போலவே இருந்தது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமரைச் சந்திக்கவும் கை குலுக்கவும் பேசவும் எல்லா தலைவர்களும் ஆர்வம் காட்டினர். ஆசிய உச்சி மாநாட்டிலும் ஜி-20 அமைப்பின் மாநாட்டிலும் 40 நாடுகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசுகிறார் மோடி.

இதுவரை இருந்திராத வகையில்…

பிரதமர் பதவிக்கு உரிய இலக்கணங்களின்படி இல்லாதவர்தான் மோடி. சாதிய அடுக்குகளில் மேல் சாதியினருக்கே உயர் பதவிகள் என்ற சமூக உரிமையைத் தகர்த்த, பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் மோடி. தகப்பனார் தயாரித்த தேநீரை ரயில் நிலையங்களுக்குக் கொண்டுபோய் விற்ற சாமானிய தேநீர் வியாபாரிக்கு, பிரதமராகும் தகுதி உண்டா என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் எள்ளி நகையாடியபோது, ஆம் நான், தேநீர் விற்றவன்தான், மக்களுடைய துயரங்களை அனுபவித்து உணர்ந்தவன் என்று கூறி ஆட்சியைக் கைப்பற்றினார். துறவியைப்போல எளிமையான வாழ்க்கை, உணவு விஷயத்தில் சைவ உணவுக்காரர், லாகிரி வஸ்துக்கள், மது போன்ற கெட்ட பழக்கங்கள் ஏதும் இல்லாதவர், அன்றாடம் தியானம், யோகாசனம் செய்பவர், பட்டினி கிடந்து விரதமிருப்பவர், கடவுள் நம்பிக்கை மிகுந்தவர், பதவிக்குரிய படாடோபமும், பரிவாரங்களுடனான பவனிகளையும் கடைப்பிடிக்காதவர். தேநீர் விற்பவர் என்று அவரை முதலில் கேலி செய்த காங்கிரஸ் கட்சியே வருத்தப்படும் அளவுக்கு, அந்த ஏச்சையே தன்னுடைய பிரசாரத்துக்கு உரமாக மாற்றி வெற்றி கண்டவர். பிற்படுத்தப்பட்டவர்களும் ஏழைகளும் மோடியைத் தங்களுள் ஒருவராக அடையாளம் காண அந்த கேலிதான் பெரிதும் உதவியது.

“காங்கிரஸ்காரர்கள் ஆளப்பிறந்தவர்கள், ஆட்சியதிகாரம் முழுவதையும் தங்களுடைய சட்டைப்பைகளை நிரப்பிக்கொள்ளவும் தங்களுடைய குடும்பத்தினர் தழைக்கவும் பயன்படுத்திக்கொண்டவர்கள், ஏழைகளை நட்டாற்றில் விட்டவர்கள்” என்று பிரச்சாரம் செய்து வெற்றியைத் தழுவினார். உங்களில் ஒருவன் நான், உங்களுடைய பிரச்சினை எதுவென்று எனக்குத் தெரியும், எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள், உங்களுடைய கவலை களைப் போக்குகிறேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்தார்.

நேரு குடும்ப ஆட்சி முடிந்தது

2014 மே மாதம் நடந்த மக்களவை பொதுத் தேர்தலில் நரேந்திர மோடியின் அனல் பறக்கும் பிரச்சாரம் காங்கிரஸ் கட்சியைச் சிதறடித்தது. மத்திய அரசின் மீது நேரு-இந்திரா காந்தி குடும்பத்துக்கு இருந்த பிடி தகர்ந்தது.

பதவிக்கு வந்த மோடி, இந்து தேசிய வாதத்தின் மொழி எதுவென்று நன்கு புரிந்து வைத்துள்ளார். ஆங்கிலத்தில் பேச முடியும் என்றாலும் முக்கியமான கட்டங்களில் எல்லாம் இந்தியிலேயே பேசுகிறார். வட இந்தியாவின் சாமானியர்கள் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய மொழி அதுதான். இந்திய அரசியலில் மொழி முக்கியப் பங்கு வகிக்கிறது. மோடி தேர்ந்தெடுத்த மொழியானது, அவர் நம்மவர், நம்மைவிட உயர்ந்தவர் அல்ல என்ற எண்ணத்தை மக்களிடையே ஏற்படுத்தியது.

குவீன்ஸ்ஸாந்து தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மைப் பணிக்கான ரோபாட்டைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிக்கு அழைக்கப் பட்டிருந்த மோடி தன்னுடைய தாய் மொழி யான குஜராத்தியில், பார்வை யாளர் குறிப்பேட்டில் எழுதினார். “மனிதகுலத் தின் மேம்பாட்டு வளர்ச்சி முழுக்க ஆராய்ச்சி என்பதன் தொடர்பயணம்தான்” என்று அதில் குறிப்பிட்டிருந்தார். மிகப் பொருத்தமான கருத்து.

இந்தியாவின் பாரம்பரியத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ள மோடி, நவீனத் தொழில் நுட்பங்களைக் கையாளத் தயங்குவதேயில்லை. ட்விட்டரில் அவரைப் பின்பற்றும் இந்திய இளைஞர்களின் எண்ணிக்கை 60 லட்சத்துக்கும் மேல். தேர்தல் பிரச்சாரத்தைக்கூட காணொலிக் காட்சி மூலம் நடத்தி மக்களிடம் ஆதரவு திரட்டினார்.

அதிகாரிகளின் ஊழலும் திறமைக்குறைவும் உலகப் பிரசித்தம். அவர்களை வேலை செய்ய வைப்பதற்காக ஆன்-லைன் நிர்வாகத்தைக் கொண்டுவந்திருக்கிறார். தங்களுடைய அதிகாரி கள் நேரத்துக்கு அலுவலகம் வருகிறார்களா, தாங்கள் தரும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்று மக்களே நேரில் தெரிந்துகொள்ள இது பெரிதும் உதவுகிறது.

தூய்மை இந்தியா திட்டம்

காந்திஜியின் பிறந்த நாளில் ‘தூய்மை இந்தியா இயக்கத்தை’த் தொடங்கிவைத்தார். சாலைகளையும் பூங்காக்களை யும், பொது இடங்களையும் தூய்மையாக வைத்திருக்க நாடு முழுக்க இயக்கம் தொடங்கப் பட்டிருக்கிறது. மக்களும் இதில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

அவருடைய தூய்மை இந்தியா இயக்கம் முழுக்க வெற்றிகரமானதுமல்ல; 66 பேர் களைக் கொண்ட அவருடைய அமைச்சரவையிலேயே 20 பேர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுகள் பதிவாகியிருக்கின்றன. அவருடைய ஆட்சி தொடர்பாக மக்களுக்கு அச்சத்தை ஏற்படும் அம்சம் இது.

சுமார் பத்தாண்டுகள் குஜராத் மாநிலத்தின் முதல்வராக மோடி இருந்திருக்கிறார். ஆண்டுக்கு 10% என்ற வீதத்தில் அம் மாநிலத்தின் பொருளாதாரம் வளர்ச்சி கண்டது. பொருளாதார வளர்ச்சி ஒரு பக்கம் இருக்கட்டும், கட்சிக்குள்ளும் ஆட்சியிலும் அவர் ஒரு சர்வாதிகாரி என்ற பெயரையே பெற்றார். எந்தவித எதிர்ப்பையும் அவர் அனுமதித்ததில்லை. அரசியலில் அவர் எவ்வளவு சாதித்தாலும் குஜராத் வகுப்புக் கலவரங்களால் அவருடைய பெயருக்கு ஏற்பட்ட களங்கம் நீடிக்கவே செய்யும். 18 கோடி முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களும் இதர சிறுபான்மைச் சமூகங்களும் இனச் சிறுபான்மையினரும் அவரைத் தங்களுடைய பிரதமராக இன்னும் ஏற்காத நிலையே தொடருகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு அவர் வந்திறங்கிய போது, ‘மனித குலத்துக்கு எதிராகக் குற்ற மிழைத்தவர், இனப்படுகொலை செய்தவர்’ என்று அமெரிக்க நீதி மையம் என்ற அமைப்பு காமன்வெல்த் அமைப்பிடம் கிரிமினல் குற்றச் சாட்டை பதிவு செய்தது. இந்தக் குற்றச்சாட்டின் பேரில் அவர் மீது வழக்கு வந்துவிடாது. ஆனால் ஆஸ்திரேலியாவில் அவரைப்பற்றிய சர்ச்சை தொடரவே இது வழிவகுக்கும்.

ஆஸ்திரேலிய அரசின் தீர்க்கதரிசனம்

அரசியலில் மோடி ஏற்றம் பெறுவார் என்று முதலிலேயே கணித்தது ஆஸ்திரேலிய அரசுதான். மேற்கத்திய நாடுகள் மோடிக்கு எதிராக அணி திரண்ட போதும் அவருக்கு ஆதரவாக இருந்தது ஆஸ்திரேலியாதான். 2004-ல் ஆஸ்திரேலியாவுக்கு வந்த மோடி நட்பை வளர்த்துக்கொண்டார். ஆஸ்திரேலியா தன் மீது வைத்த நம்பிக்கைக்குக் கைம்மாறு செய்யும் நிலையில் இப்போது இருக்கிறார்.

1986-ல் பிரதமர் பாப் ஹோக்கைச் சந்திக்க வந்த பிரதமர் ராஜீவ் காந்திக்குப் பிறகு ஆஸ்திரேலியா வந்திருக்கும் பிரதமர் மோடிதான். பிரதமர் டோனி அபோட்டுடன் தனி சந்திப்பு, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் உரை, இந்திய வம்சாவழியினருடன் சந்திப்பு, வர்த்தகப் பிரமுகர்களுடன் சந்திப்பு என்று சிட்னியிலும் மெல்போர்னிலும் அவருக்கு நிகழ்ச்சிகள் ஏராளம்.

இந்தியாவுடன் உறவு கொள்ள வேண்டுமென்றால் அது மோடியுடன் நட்பு வைத்துக்கொண்டால்தான் முடியும் என்பதை உணர்ந்து பிற நாடு களும் இப்போது அவருடன் பழகத் தொடங்கி யுள்ளன. கோத்ரா தொடர்பான சம்பவங்கள் எப்படியிருந்தாலும் இந்தியாவில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் அவர். உலக அரங்கிலேயே மிகவும் சக்திவாய்ந்த தலைவர். உலக அரங்கில் தலைதூக்கிவரும் பொருளாதார சக்தியான இந்தியாவை குறைந்தது பத்தாண்டுகளுக்கு அவர் ஆட்சி செய்வார்.

ஒரு காலத்தில் இப்படியெல்லாம் நடக்கும் என்று யாரும் கற்பனைகூட செய்திருக்க மாட்டார்கள். ஆனால் இந்த ஜி-20 மாநாட்டில் மிகவும் பிரபலமான தலைவர் அவர்தான். மற்றவர்கள் அவரைப் பார்க்கவும், அவரோடு பார்க்கப்படவும் விரும்புகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x