

பரம்பரையாக அரசியலிருந்து வருபவர்களின் வாரிசுகளுக்கு ஆதரவளிக்க இந்திய வாக்காளர்களில் 46 சதவீதம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவு கூறுகிறது. வாஷிங்டனை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் சர்வதேச அமைதிக்கான அறக்கட்டளையான கார்னெஜி, இந்தியாவில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் குறித்த ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது.
இதன்படி, பரம்பரையாக அரசியலில் ஈடுபட்டுள்ளவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு வாக்களிக்க விரும்புவதாக ஆய்வில் பங்கேற்றவர்களில் 46 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். பரம்பரை அரசியல்வாதிகளின் வாரிசு வேட்பாளர்களை இந்திய வாக்காளர்கள் புறக்கணிப்பார்கள் என்று பெரும்பாலான கருத்து கணிப்புகள் கூறிவரும் நிலையில், அதற்கு நேர் மாறாக இந்த ஆய்வின் முடிவு உள்ளது.
இதுகுறித்து கார்னெஜி அமைப் பின் தெற்கு ஆசிய திட்டத்துக்கான அதிகாரி மிலன் வைஷ்னவ் கூறுகையில்,
"இந்த ஆய்வு முடிவு ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. அதாவது ஆய்வில் பங்கேற்றவர்களில் கிட்டத்தட்ட 2-ல் ஒருவர் அரசியல் குடும்பப் பின்னணி உள்ள வேட்பாளருக்கே வாக்களிக்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்" என்றார்.
ஏற்கெனவே அரசியலில் உள்ளவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் மட்டுமே திறமையாக ஆட்சி செய்ய முடியும் அல்லது வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறோம் என பெரும்பாலான வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.