Published : 03 Dec 2013 02:41 PM
Last Updated : 03 Dec 2013 02:41 PM

இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணம் வருவதை அனுமதிக்கக் கூடாது

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், யாழ்ப்பாணம் வருவதற்கு அனுமதிக்கவே கூடாது என்று இலங்கை நாடாளு மன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைவர் ஜான் அமரதுங்கா தெரிவித்தார்.

இலங்கையின் வடக்கு மாகாண முதல்வராக சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்ற சி.வி.விக்னேஸ்வரன், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை யாழ்ப்பாணத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

இந்த விவகாரம் இலங்கை நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை எதிரொலித்தது. இதுதொடர்பாக முன்னாள் உள்துறை அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த தலைவருமான ஜான் அமரதுங்கா நாடாளுமன்ற அவையில் பேசியதாவது:

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை யாழ்ப்பாணம் வருமாறு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார். அதிபர் ராஜபக்சேவின் அழைப்பு இல்லாமல் இந்தியப் பிரதமர் இலங்கையில் சுற்றுப் பயணம் செய்வது சரிதானா?

கொழும்பில் நடை பெற்ற காமன்வெல்த் மாநாட்டுக்கு இந்தியப் பிரதமர் வரவில்லை. அந்த மாநாட்டை அவர் திட்டமிட்டே புறக்கணித்தார். ஆனால் அவர் யாழ்ப்பாணத்துக்கு வருவாராம். இதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவர் யாழ்ப்பாணம் வருவதை ஒருபோதும் அனுமதிக்கவே கூடாது.

முதல்வர் விக்னேஸ்வரனின் அழைப்பை பிரதமர் மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டிருப்பது மூலம் ஒரு விஷயம் தெளிவாகப் புரிகிறது. இலங்கையைப் பிரிக்க இந்தியா முயற்சி செய்கிறது. தனிநாடு கோரிக்கைக்கு ஆதரவளிக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது என்று அவர் பேசினார்.

கடந்த ஆண்டில் இலங்கை அமைச்சர் ரெஜினால்ட் கூரே இந்தியா வந்தபோது அவருக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, அதன் காரணமாகவே அவர் தனது இந்தியப் பயணத்தை ரத்து செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அப்போது ஆவேசமாகப் பேட்டியளித்த அமரதுங்கா, இந்திய அரசியல் தலைவர்கள் இலங்கைக்கு வரும்போது அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று கூறினார். முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே அரசில் உள்துறை அமைச்சராக இருந்த அமரதுங்கா இந்தியாவுக்கு எதிராகத் தொடர்ந்து பேசி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x