Published : 28 Oct 2013 15:51 pm

Updated : 06 Jun 2017 12:40 pm

 

Published : 28 Oct 2013 03:51 PM
Last Updated : 06 Jun 2017 12:40 PM

தொழிலாளர்கள் புலம்பெயர்வதைத் தடுக்க முடியாது: பிரான்ஸ்வா கிராபொவ்

பேராசிரியர் பிரான்ஸ்வா கிராபொவ் சர்வதேசச் சட்டத்தில் நிபுணர். வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகள், பாதுகாப்பு, குடியேற்றம் தொடர்பான சட்டங்களில் அனுபவம் வாய்ந்தவர். சர்வதேச அளவில் புலம்பெயரும் தொழிலாளர்களின் நிலைகுறித்து ஆராய்ந்து அறிக்கை தர ஐ.நா. சபையால் 2011-ல் நியமிக்கப்பட்டவர். கனடா நாட்டின் மாண்ட்ரீல் நகரில் உள்ள ஜேம்ஸ் மெக்கில் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார். சமீப காலமாக, ஐரோப்பிய நாடுகளில் குடியேற முறையான பயண ஆவணங்களின்றி படகுகளில் வந்து, மத்தியத் தரைக்கடல் பகுதியில் விபத்தில் சிக்கி ஆப்பிரிக்கர்கள் உயிரை இழக்கும் பின்னணியில், வைஜு நரவாணேயின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறார்.

லாம்பெடுசா தீவுக்கு அருகில் நடந்த படகு விபத்திலிருந்து ‘நாம்’ உணரும் பாடம் என்ன?


‘நாம்’ என்பது யார்? நான் உணர்வதைப் போல அரசியல்வாதிகளும் உணர்வார்கள் என்று நான் நினைக்கவில்லை. வேலை தேடித் தங்கள் நாட்டுக்குள் குடியேற வரும் மக்கள் தொடர்பாகப் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்குக் கொள்கை என்று ஏதும் இல்லை. அவர்கள் தங்களுடைய போக்கைத் திசைமாற்றிக்கொள்ளாதவரை இதுபோன்ற படகு விபத்துகள் தொடரும். கொள்கையை உருவாக்க அசாத்திய அரசியல் துணிவு வேண்டும். அது ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களிடம் இல்லை. உள்நாட்டு மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் கசப்பான சில உண்மைகளை அவர்கள் கூறத்தான் வேண்டும். தீவிர வலதுசாரிக் கட்சிகளும் பிறநாட்டவர் குடியேறுவதை எதிர்க்கும் இயக்கங்களும் தீவிரமாகச் செயல்படும்போது இது கடினம்தான். ஆனால், இதைத் தவிர்க்க முடியாது.

இப்போது நிலைமை எப்படி இருக்கிறது?

இருவிதமான இயக்கங்கள் ஒன்று கலப்பதை நாம் காண்கிறோம். நாடுகள் தங்களுடைய பிரதேச எல்லையை, இறையாண்மையை உறுதிப்படுத்திக்கொள்ள விரும்புகின்றன. ஏனென்றால், அவற்றை அவை இப்போது மெல்லமெல்ல இழந்துகொண்டிருக்கின்றன. இப்போது எந்த நாட்டுக்கும் தேசியத் தொழில்கொள்கை, தேசிய விசைக்கொள்கை, தேசிய ஆய்வுக்கொள்கை கிடையாது. இப்போது எல்லாமே உலகமயமாக்கலில் சிக்கிவிட்டதால் அவற்றின் மீது எந்த நாட்டுக்கும் கட்டுப்பாடு இல்லை. வரிவிதிப்பதற்கான வாய்ப்பும் குறைந்துவிட்டதால் சமூகக் கொள்கைகூடக் கிடையாது.

ஒரு நாடு வரி விதித்தால், பக்கத்து நாடு வரிச்சலுகை அளித்து அந்தத் தொழிலை ஈர்க்கத் தயாராக இருப்பதால், வரிவிதிக்கும் சுதந்திரத்துக்குக்கூட வந்தது ஆபத்து. தொழில், வியாபாரத்தை ஈர்க்க வரிச்சலுகைகள் தருவதில் போட்டியிடுகின்றன. இறையாண்மையை நிறுவ ஒரே வழி, எல்லைகளை உறுதிசெய்வதுதான் என்று எல்லைப்புறங்களில் கட்டுக்காவலை வலுப்படுத்தவும் கண்காணிக்கவும் அதிகம் செலவிடுகின்றன. இந்தக் கொள்கையும் தோற்றுவிட்டது. ஆனால், நாடுகள் இன்னமும் இதை உணரவில்லை.

எல்லைகளை இழுத்துப்பூட்டுவது இப்போது எல்லா நாடுகளுக்குமே ‘கனவுத் திட்டமாக’ இருக்கிறது. “என்னுடைய பதவிக்காலத்தில் ஒரு ஈ, எறும்புகூட வராமல் பாதுகாப்பேன்” என்று குடியேற்றத் துறையைக் கையில் வைத்துள்ள எல்லா நாட்டு அமைச்சர்களும் கொக்கரிக்கின்றனர்.

வெளிநாடுகளில் குடியேறும் தொழிலாளர்கள் அந்த நாட்டின் பொருளாதாரம் செழிக்க உழைக்கின்றனர், அந்த நாட்டின் பொருளாதாரத்தால் உள்ளிழுக்கப்படுகின்றனர். எனவே, வேலை கிடைக்கிறது. இந்த நிலையில், ஸ்பெயினில் 40 சதவீதமும் பிரான்ஸில் 13 சதவீதமும் வேலையில்லாத் திண்டாட்டம் இருப்பதை எப்படி விளக்குவது?

வேலைவாய்ப்பு இல்லாத நாடுகளுக்கு வெளிநாடுகளிலிருந்து தொழிலாளர்கள் வருவதே இல்லை. தொழிலாளர்கள் வெளிநாடுகளில் வேலைக்குச் செல்ல விரும்புவதன் முதல் காரணமே ஊதியத்தில் கணிசமான தொகையைச் சொந்த நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற ஆசையால்தான். பிச்சை எடுக்கவோ, குடியேறும் நாடுகளில் தரப்படும் நலவாழ்வு வசதிகளைப் பெறவோ அல்ல.

தங்களுடைய அரசுகள் தரும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்காகத்தான் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் வருகிறார்கள் என்று ஐரோப்பிய நாடுகளின் அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை நல்ல கற்பனை.

நலவாழ்வுத் திட்டங்களின் பலன்களைப் பெறும் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை, உள்நாட்டில் அந்தப் பலனைப் பெறுவோருடன் ஒப்பிட்டால் மிகமிகக் குறைவு.

கனடா நாட்டின் கியூபெக் மாகாணத்தில் ஸ்ட்ராபெரி தோட்டங்களில் அந்தப் பழங்களைச் சேகரிப்பது இடுப்பொடியும் அளவுக்குக் கடுமையான வேலை. அதற்குக் கொடுக்கப்படும் கூலி மிகமிகச் சொற்பம். காரணம், ஸ்ட்ராபெரி சாகுபடியாளருக்கு அதிலிருந்து கிடைக்கும் லாபம் மிகமிகக் குறைவு. எனவே, அவர்களால் மிகக் குறைந்த அளவுக்குத்தான் கூலி தர முடியும். கனடா நாட்டுச் சட்டம் கூறுகிறபடி குறைந்தபட்ச ஊதியம் கொடுத்து உள்ளூர்க்காரரை வேலைக்கு வைத்தால், அவர்களால் விவசாயம் செய்ய முடியாது.

விவசாயம், கட்டட வேலை, ஓட்டல்களில் பாத்திரம் கழுவும் வேலை, அறைகளைச் சுத்தம் செய்யும் வேலை ஆகியவை தொடர்ந்து செய்ய வேண்டிய வேலைகள். அதற்கு நாள் முழுக்க வேலை செய்தாலும் சுமார் 120 ரூபாய் முதல் 180 ரூபாய்க்கு மேல் கிடைக்காது. அதனால்தான் உள்நாட்டில் 40 லட்சம் பேர் வேலையில்லாமல் இருக்கும்போது வெளிநாட்டு வேலைக்காரர்கள் 40 லட்சம் பேர் அதே வேலையைச் செய்கிறார்கள். குறைந்தபட்ச ஊதியச் சட்டப்படி பார்த்தால், இது உழைப்புச் சுரண்டல்தான்.

உழைப்புச் சுரண்டல் உள்ள இந்த வேலைகளைக் குறைந்த ஊதியத்துக்குச் செய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள், வேலைக்குப் போகாத உள்நாட்டவர்கள் உழைக்காமலேயே அரசின் சலுகைகளை அனுபவிக்க உதவுகிறார்கள் என்கிறீர்களா?

அது அப்படியல்ல. மிகக் குறைந்த அளவே லாபம் ஈட்டக்கூடிய, கடினமாக உழைக்க வேண்டிய சில துறைகள் உள்ளன. எனவே, சமூகம் - சில வேளைகளில் அரசும்கூட - இந்தத் துறைகளில் தொடர்ந்து வேலை நடக்க, அங்கு நிலவும் ஊதியச் சுரண்டலைக் கண்டுகொள்ளாமல் மௌனம் சாதிக்கின்றன. தொழிலாளர் நலத் துறை ஆய்வாளர்கள் முறையாக இந்தத் துறைகளில் ஆய்வு செய்தால் தொழிலாளர்கள் சுரண்டப்படுவதற்கு வாய்ப்பே இருக்காது. இந்த வேலைக்கேற்ற ஊதியம் கொடுங்கள் என்று தொழில்துறையினரைக் கேட்டால், பல துறைகளில் தொழிற்பிரிவுகளையே மூட வேண்டியிருக்கும். அந்த நிலையில்தான், குறைந்த ஊதியத்துக்கு வேலைசெய்யும் வெளிநாட்டுத் தொழிலாளர் அந்தத் துறைக்கு மட்டுமல்ல… அந்த நாட்டுக்கும் உதவியாக இருக்கிறார்.

இந்தத் தொழிலாளர்கள் மட்டும் இல்லை என்றால், பல தொழில்துறைகளால் சர்வதேச அளவில் போட்டிபோடவே முடியாது. அவர்கள்தான் உற்பத்திச் செலவைக் கணிசமாக மிச்சப்படுத்தித் தருகின்றனர். வேளாண்மை, ஓட்டல் தொழில், சுற்றுலா, கட்டுமானம் ஆகிய துறைகளில் தொழிலாளர்களுக்குத் தரப்பட வேண்டிய முழு ஊதியத்தை நிறுவனங்கள் தருவதற்கு அரசாங்கம் நேரடியாக மானியம் கொடுத்தால், உள்ளூர்த் தொழிலாளர்களையே முழு ஊதியத்துக்கு வேலைக்கு வைத்துக்கொண்டுவிடலாம். அரசு இதற்குத் தயாரா? முறையான ஊதியமோ, பணி நிலைமையில் மேம்பாடோ இல்லாமலேயே வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கடுமையாக உழைத்துப் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறார்கள். இது தொடர்பாக நாம் மனம் திறந்து பேச முடியுமா? இப்போதைக்கு முடியாது.

அது ஏன் அப்படி?

சமூகத்தில் நலிவுற்ற பிரிவினரின் தலையெழுத்தே அதுதான். அவர்களுக்கு வாக்குரிமை கிடையாது. எனவே, அரசியல்ரீதியாக அவர்களுக்கு முக்கியத்துவம் ஏதுமில்லை. அவர்களால் புகார் செய்யவோ போராடவோ முடியாது. ஒரு சில வேளைகளில் - பொறுக்க முடியாமல் போகும்போது - தங்களுடைய கோரிக்கைகளுக்காகக் குரல்கொடுக்கின்றனர்.

தகுந்த மாற்றுத் தொழிலாளர்கள் கிடைக்கும்வரை - சில வேளைகளில் - ஊதியத்தை உயர்த்திக் கொடுத்தாக வேண்டியிருக்கிறது. உதாரணத்துக்கு எண்ணெய்த் துரப்பணப் பணிகள். சட்டையில், உடலில் எல்லாம் அழுக்கு அப்பிக்கொள்கிறது. கொஞ்சம் அயர்ந்தால் உயிருக்கே ஆபத்தாகிவிடுகிறது. நாள் முழுக்க வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இந்தச் சூழலையெல்லாம் கருத்தில்கொண்டே தொழிலாளர்கள் இந்த வேலைக்கு வருவதில்லை. எனவே, அவர்களை ஈர்க்க அதிக ஊதியம், அதிக அளவில் படிகள், அதிகச் சலுகைகள் தர வேண்டியிருக்கிறது. அதுமட்டுமல்ல - அபரிமிதமான லாபம் கிடைக்கும் தொழில் என்பதாலும், அதில் தொழிலாளர்களின் ஊதியம் மிகச் சிறிய பங்குதான் என்பதாலும் - ஊதியத்தைக் கணிசமாகவே தரத் தயாராக இருக்கின்றனர்.

எல்லா நாடுகளுக்குமே வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தேவை. 2050 வாக்கில் ஐரோப்பிய நாடுகளுக்கு மட்டும் 15 கோடித் தொழிலாளர்கள் தேவை. மருத்துவர்கள், பொறியியலாளர்கள் மட்டுமல்ல, முறையாகப் படித்துத் தகுதி பெற்ற தொழிலாளர்களும் குறைந்த படிப்பறிவுள்ள தொழிலாளர்களும் அவசியம் தேவை.

ஜெர்மனியும் பிரிட்டனும் இதைப் புரிந்துகொண்டுள்ளன. பிரான்ஸிலோ இத்தாலியிலோ பிற ஐரோப்பிய நாடுகளிலோ இது இன்னமும் புரிந்துகொள்ளப்படவில்லை. “எங்களுடைய தேசம் எங்களுக்குத்தான் - அந்நியருக்கு இங்கே இடமில்லை” என்ற கோஷம் ஓங்கி ஒலிக்கிறது. இன்னும் 50 ஆண்டுகளில் நாம் சந்திக்கவுள்ள சவால்கள் என்ன என்ற நீண்டகால அணுகுமுறை அவசியம்.

இந்தியாவிலிருந்து தொழிலாளர்கள் பிற நாடுகளுக்குச் செல்கிறார்கள், பிற நாடுகளிலிருந்தும் தொழிலாளர்கள் இந்தியாவுக்கு வருகிறார்கள். இது மிகவும் விநோதமான சூழ்நிலை. பொருள்களையும் சேவைகளையும் மட்டும் எங்களிடம் வாங்காமல் எங்களுடைய தொழிலாளர்களையும் வேலைக்கு எடுத்துக்கொள்ளுங்கள் என்று ஆசியாவின் தெற்கில் உள்ள நாடுகள் கோருகின்றன. இந்தப் பேச்சுவார்த்தை தடுக்கப்பட்டுவிட்டதா? எந்த அரங்கில் இதைப் பற்றிப் பேச முடியும்? உலக வர்த்தக நிறுவனம் (டபிள்யு.டி.ஓ.) இதற்கு அப்பாற்பட்டதா?

உலகமயமாக்கல் என்பது உலகின் பிற நாடுகளுடன் தொடர்புகொள்வதற்கும் புதிய சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் கலாச்சாரப் பரிவர்த்தனைக்கும் நல்லதொரு வாய்ப்பு என்று கருதப்படாமல், தங்களுடைய தனித்தன்மையை அழிக்கவல்ல மாற்றம் என்றே உலகம் முழுவதும் கருதப்படுகிறது. நாடுகளின் நிலம், கடல், வான் எல்லைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வால் பொருள்களை வரவேற்றாலும் சேவையை அனுமதித்தாலும் தொழிலாளர்கள் வருகைக்கு மட்டும் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். இதில் டபிள்யு.டி.ஓ. பெரிதாக ஏதும் செய்துவிடாது. அரசியல் சர்ச்சைகளை ஏற்படுத்தாத உடன்பாடுகளைச் செய்துகொள்வதையே அது வரவேற்கிறது. தொழிலாளர்களின் குடியேற்றத்தால் தங்களுடைய கலாச்சாரமே பாதிக்கப்பட்டுவிடும் என்று நாடுகள் கருதுவதால், அதைப் பற்றிப் பேசுவதற்கே அவை தயாராக இருக்காது என்றே கருதுகிறேன்.

இவையெல்லாம் நீண்டகாலத் தீர்வுகள். லாம்பெடுசா போன்றவை (படகு விபத்துகள்) நிகழாமல் தடுக்கக் குறுகிய காலத்தில் நாம் என்ன செய்யலாம்?

அரசியல்வாதிகள் ஏற்கும்படியான குறுகிய காலத் தீர்வுகள் ஏதும் இதற்குக் கிடையாது. கடலில் அகதிகள் இறக்காமல் தடுக்க வேண்டும் என்றால், நேரடியாகவே அவர்களை அனுமதிக்கும் வழிமுறைகளை அதிகப்படுத்த வேண்டும். கடலில் வரும் கப்பல்களை வழிமறிப்பதையும், நிலவழியாக வருவதைத் தடுப்பதையும் கைவிட வேண்டும். இப்படியெல்லாம் செய்வதில் தடைகள் இருக்கும் இடத்தில், அவற்றை மீறக் கடத்தல் கும்பல்களை நாமே ஊக்குவிக்கிறோம். வேலைக்காகவோ பாதுகாப்புக்காகவோ இடம்பெயர்ந்தே தீர வேண்டிய நிலையில் உள்ளவர்களை நேரடியாக அனுமதிப்பதன் மூலம் அவர்களுக்கும் பணச் செலவு இல்லாமல், உயிருக்கும் ஆபத்து இல்லாமல் தடுக்கலாம். இல்லையென்றால், இடைத்தரகர்களுக்குத்தான் சம்பாதிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். சட்டவிரோதமாக மதுபானங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதிலும் போதைமருந்துக் கடத்தலைத் தடுப்பதிலும் இதுதான் நடக்கிறது.

பிற நாடுகளிலிருந்து நம் நாட்டுக்கு வர விரும்பும் மக்களின் மனப்போக்குக்கு எதிராகப் போர் தொடுத்து நாம் வெற்றிபெற முடியாது. ஏனென்றால், சொந்த நாட்டில் இருக்க முடியாமல் - உயிரைப் பணயமாக வைத்துத்தான் - அவர்கள் வருகிறார்கள். அவர்களுடைய இறப்பு குறித்து நாம் உண்மையிலேயே கவலைப்பட்டால், அவர்களை வர விட வேண்டும். அப்படிச் செய்தால்தான் இந்தச் சாவுகளைத் தடுக்க முடியும்.

தமிழில்: சாரி


தொழிலாளர்கள்பிரான்ஸ்வா கிராபொவ்சர்வதேசச் சட்டம்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x