

இந்தியா, சீனா மட்டுமே அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை படிப்பதற்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்து வருவதாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளில் சேர்ந்து படிப்பவர்களில் கணிசமானவர்கள் இந்தியர்களே என தெரியவந்துள்ளது.
இது குறித்து செவிஸ் என்ற அமைப்பு ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.:
கடந்த ஆண்டு சீனா 3,62,368 பேரையும், இந்தியா 2,06,698 பேரையும் மேல்படிப்புக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளன. இதில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத் துறைகளை ஆர்வமுடன் தேர்ந்தெடுப்பவர்களில் இந்திய மாணவர்களே அதிகம். 84 சதவீதம் என்ற அளவுக்கு இந்த துறைகளில் இந்தியர்களே அதிக ஆதிக்கம் செலுத்துகின்றனர். கடந்த ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் அமெரிக்காவில் படிக்கும் சர்வதேச மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 2 சதவீதம் அதிகரித்துள்ளது. அதில் 5,14,000 வெளிநாட்டு மாணவர்கள் கடந்த மே மாதம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் அல்லது கணிதத் துறைகளில் பட்டப் படிப்பை தொடர்ந்துள்ளனர்.
அமெரிக்காவில் படிக்கும் ஒட்டுமொத்த வெளிநாட்டு மாணவர்களில் 79 சதவீதம் பேர் ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.