Published : 06 Jul 2016 05:51 PM
Last Updated : 06 Jul 2016 05:51 PM

பேச்சில் உள்ள தீவிரத்தை செயலில் காட்டவில்லை: மோடி அரசு மீது அமெரிக்கா விமர்சனம்

பிரதமர் மோடி தலைமையிலான அரசு பேசும் அளவுக்கு செயலில் தீவிரம் காட்டவில்லை என்று அமெரிக்க அரசுத்துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

அயல்நாடுகளில் முதலீட்டுச் சூழல் குறித்த அமெரிக்க அரசுத்துறையின் ஆண்டு மதிப்பீட்டறிக்கையில், 2014 தேர்தலில் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் முதலீட்டாளர்கள் பார்வையில் பெரிய திருப்பம் ஏற்பட்டது, ஆனால் மோடி அரசு இந்த எதிர்பார்ப்புகளுக்கு இணங்க செயல்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையை அமெரிக்க தூதரகங்கள் தயாரித்துள்ளன, இதில் அமெரிக்க நிறுவனங்களுக்கான அயல்நாட்டு முதலீட்டு சாதக சூழ்நிலைகள் மதிப்பீடு செய்யப்பட்டு அறிக்கையாக தாக்கல் செய்யப்படும்.

இதில் இந்தியா என்ற தலைப்பின் கீழ் செய்யப்பட்டுள்ள மதிப்பீடுகளில் ஒரு பகுதி மோடி அரசின் ஆட்சி அதிகார நேர்படுத்தலை பாராட்டியதோடு, அன்னிய நேரடி முதலீடுகளில் துறைகளை விரிவாக்கம் செய்ததும் புகழ்ந்து கூறப்பட்டுள்ளது.

“மதிப்பிற்குரிய ரகுராம் ராஜன் தலைமையில் நிதிக்கொள்கைகள் முதலீட்டாளர்களுக்கு உற்சாகம் அளித்தது. ஆனால் பிற பொருளாதார சீர்த்திருத்தங்களில் மோடி அரசு மந்தமாகச் செயல்பட்டுள்ளது. அதாவது அதன் கோரல்கள், பேச்சுக்கள் அதன் நடைமுறைகளுக்கு பொருத்தமாக இல்லை. இந்தியா உலகிலேயே வேகமாக வளர்ச்சியடையும் ஒரு பொருளாதாரமே ஆனால் முதலீட்டாளர்கள் எதிர்பார்ப்பில் இந்திய அரசின் மந்தமான நடவடிக்கைகள் காரணமாக சுமார் 7.5% பொருளாதார வளர்ச்சி என்று கூறப்படுவதே அதீத கூற்றாகத் தொனிக்கிறது” என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்க தலைநகரில் மோடியிடம் பேச்சு இருக்கும் அளவுக்கு செயலில் வேகம் இல்லை என்ற பேச்சுகள் ஒலிக்கத் தொடங்கியுள்ளதாக செனேட் கமிட்டியின் குடியரசுக் கட்சி சேர்மன் பாப் கார்க்கர் கூறுகிறார், “யு.எஸ்-இந்திய உறவுகளில் நம்பிக்கை ஜோடனை பேச்சுகள் எல்லை மீறிவிட்டன, ஆனால் கண்ணுக்குத் தெரியும் சாதனைகள் எதுவும் இல்லை” என்றார்.

கடந்த ஜூன் மாதம் அமெரிக்க வர்த்தகத் துறை அதிபர்களைச் சந்தித்த பிரதமர் மோடி, “நான் பலமுறை கூறிவிட்டேன், என்னுடைய சீர்த்திருத்தம் மாற்றத்துக்கானது. சாமானிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவது என்பதே என்னைப் பொறுத்தவரை சீர்த்திருத்தமாகும். கடந்த 2 ஆண்டுகளில் மிகப்பெரிய அளவில் பொருளாதாரச் சீர்திருத்த கொள்கைகளை வகுத்தெடுத்து நடைமுறைப்படுத்தியுள்ளோம். இது பொருளாதாரச் சீர்த்திருத்தங்களையும் தாண்டியது” என்று கூறினார்.

ஆனால் அமெரிக்க அரசுத்துறை அறிக்கை இதற்கு மாறாக, “மோடி அரசின் மெதுவான முன்னேற்றம் பல முதலீட்டாளர்களின் ஆர்வத்தை குறைத்துள்ளது, பின்னடைவு காணச் செய்துள்ளது” என்று கூறியுள்ளது.

இந்த அறிக்கையில் பிரதானமாக விவாதிக்கப்பட்ட விவகாரங்கள்: முதலீடுகளுக்கான வரவேற்புத் தன்மை, சட்டம் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள், தகராறு தீர்ப்பு விவகாரம், அறிவுசார் காப்புரிமை, வெளிப்படைத் தன்மை, செயல்திறன் தேவைப்பாடுகள், அரசு நிறுவனங்கள், பொறுப்புள்ள வர்த்தக தொடர்பு, மற்றும் ஊழல் ஆகியவையாகும்.

“மோடி அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற பொருளாதார வளர்ச்சியை முன்னுரிமையாக்கியது. ஆனால் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் ஜி.எஸ்.டி. மசோதாக்களில் ஏற்பட்ட தோல்வி மற்றும் பஞ்சாப், குஜராத் மாநிலங்களில் ஏற்பட்ட அரசியல் கொந்தளிப்புகள் ஆகியவை அந்த மாநிலங்களில் முதலீட்டாளர்கள் ஆர்வத்துக்கு சேதம் விளைவித்தது.

அரசு தொடர்ந்து அன்னிய நேரடி முதலீட்டு துறைகளை விரிவு படுத்தியுள்ளது. சமீபத்தில் வான்வழிப் போக்குவரத்து, ராணுவம், மருத்துவம் உள்ளிட்ட சில துறைகளில் 100% அன்னிய நேரடி முதலீடுகளை அனுமதித்துள்ளது” என்று சிலவற்றை வரவேற்கவும் செய்துள்ளது அந்த அறிக்கை.

அமைப்புசார் தடைகள், கட்டுப்பாட்டுச் சூழ்நிலைகளில் எதிர்பார்க்கக்கூடிய தன்மை இல்லாமை, வரி மற்றும் கொள்கை தீர்மானமின்மைகள், உள்கட்டமைப்பு இடையூறுகள், சேவைகள் துறையில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், மேலும் பெரிய அளவிலான மின்சாரப் பற்றாக்குறை ஆகியவை இந்தியப் பொருளாதார வளர்ச்சி ஆற்றலுக்கு தடையாக உள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x