

சிரியா அதிபர் ஆசாத், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிடும் அமெரிக்க கூட்டுப் படைகளில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கு துருக்கிக்கு எதிராக அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டுள்ளன.
நேட்டோ எனப்படும் அமெரிக்க கூட்டுப்படையில் துருக்கியும் அங்கம் வகிக்கிறது. சிரியாவில் அதிபர் ஆசாத் மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவும் துருக்கியும் இணைந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன.
சிரியாவில் குறிப்பிடத்தகுந்த அளவில் குர்து இன மக்களும் வசிக்கின்றனர். அவர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. ஆனால் துருக்கி ராணுவத்தை பொறுத்தவரை குர்து இன மக்கள் அனைவரும் தீவிரவாதிகள்.
அந்த வகையில் சிரியாவின் கராசக் மலைப் பகுதி, வடக்கு இராக்கின் சின்ஜார் மலைப் பகுதியில் துருக்கி போர் விமானங்கள் குண்டுகளை வீசியுள்ளன. இதில் குர்து ஜனநாயக படையைச் சேர்ந்த 25 வீரர்கள் பலியாகினர்.
இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குர்து இன மக்களின் பாதுகாப்புக்காக அமெரிக்காவின் அதிநவீன டாங்கிகள் கராசக், சின்ஜார் மலைப் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அங்கு அமெரிக்க படைகள் துருக்கி ராணுவத்தை கண்காணிக்கும் வகையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றன.
நேட்டோ படையில் அமெரிக்காவுக்கும் துருக்கிக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் கூட்டுப் படையில் பெரும் குழப்பத்துக்கு வித்திட்டுள்ளது.