

திருடப்பட்ட நடராஜர் சிலையை 50 லட்சம் அமெரிக்க டாலர்களுக்கு (சுமார் ரூ.31 கோடி) விற்பனை செய்தது தொடர்பாக இந்திய வம்சாவளி அமெரிக்கர் சுபாஷ் கபூர் மீது ஆஸ்திரேலிய தேசிய அருங் காட்சியகம் நியூயார்க் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்திய வம்சாவளி அமெரிக்கரான சுபாஷ் கபூர், கலைப் பொருள்களை வாங்கி விற்கும் நிறுவனத்தை நியூயார்க்கில் நடத்தி வருகிறார். இவரிடமிருந்து 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால நடராஜர் சிலையை 2008ம் ஆண்டு ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியகம் சுமார் ரூ.31 கோடிக்கு வாங்கியது.
இந்தச் சிலை இந்தியாவிலிருந்து முறைகேடாக ஏற்றுமதி செய்யப்பட்டது என நீதிமன்றப் பதிவில் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து, தாங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி நியூயார்க் உச்ச நீதிமன்றத்தில் ஆஸ்திரேலிய தேசிய அருங்காட்சியகம் வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் இது தொடர்பாக கூடுதல் தகவல் எதுவும் தெரிவிக்க முடியாது என அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.