

பாதுகாப்பு அளிக்கும் நோக்கில் தான் பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டின் கணவர் மற்றும் குழந்தைகளை இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு அழைத்து வந்துள்ளோம் என்று அமெரிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் பிரீத் பராரா தெரிவித்தார்.
தனது வீட்டுப் பணிப்பெண்ணுக்கு நிர்ணயிக்கப் பட்ட ஊதியத்தை தர மறுத்தது, அதிக நேரம் வேலை செய்ய கட்டாயப்படுத்தியது தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் இந்திய துணைத் தூதர் தேவயானி கோப்ர கடேவை அமெரிக்க போலீஸார் கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த கைது சம்பவத்துக்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளின் சலுகைகளும் பறிக்கப்பட்டன.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக அமெரிக்க அரசுத் தரப்பு வழக்கறிஞர் பிரீத் பராரா கூறியதாவது: “தேவயானிக்கு எதிராகப் புகார் தெரிவித்த பணிப்பெண்ணுக்கு நெருக்குதல் தரும் வகையில் அவருக்கு எதிராக இந்தியாவில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. அதோடு, அவரை இந்தி யாவுக்கு கட்டாயப்படுத்தி வரவழைப்பதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டன.
எனவே, பாதிக்கப்பட்ட பெண், அவரின் குடும்பத்தினர் மற்றும் சாட்சிகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டியது நீதித்துறை, அரசுத் துறை வழக்கறிஞர் அலுவலகத்தின் கடமையாகும். அதன் அடிப்படை யிலேயே சங்கீதாவின் கணவர் மற்றும் குழந்தைகளை அமெரிக்கா வுக்கு அழைத்து வந்துள்ளோம்.
சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்டோ ருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். குற்றம் இழைத்தோர் அதிகாரம் மிக்கவராகவும், பணக்கா ரராகவும் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாது அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.
பணிப்பெண்களுக்கான அமெரிக்க சட்டப் பாதுகாப்பு விதி முறைகளை தேவயானி மீறிவிட்டார். அவரை கைது செய்தபோது கண்ணியக் குறைவாக நடத்தப் பட்டார் எனக் கூறப்படும் குற்றச் சாட்டு தவறானது. சாதாரண அமெரிக்க குடிமகனைவிட ஒரு படி மேலாகவே கண்ணியமாக தேவயானி நடத்தப்பட்டார்.
அவரின் குழந்தைகளின் முன்னிலையில் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்டதாக வெளியான தகவல் தவறானது. பொதுவாக இதுபோன்ற கைது நடவடிக்கைகளின்போது சம்பந்தப்பட்டவரின் செல் போனை போலீஸார் பறிமுதல் செய்வார்கள். ஆனால், தேவயானியின் செல்போனை போலீஸார் வாங்கவில்லை. அவர் பிறரிடம் செல்போனில் பேச அனுமதிக்கப்பட்டார்” என்றார்.