லண்டனில் குளியலறையில் போன் சார்ஜரால் மரணமடைந்த நபர்

லண்டனில் குளியலறையில் போன் சார்ஜரால் மரணமடைந்த நபர்
Updated on
1 min read

லண்டனில் குளியலறையில் ஐ போனை சார்ஜ் செய்த நபர் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

லண்டனைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் புல்(32) கடந்த ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி தனது குளியலறையில் நினைவற்ற நிலையில் காயங்களுடன் விழுந்து கிடந்துள்ளார். குளியலறையில் ரிச்சர்டைப் பார்த்த அவரது மனைவி அவர் முதலில் தாக்கப்பட்டுள்ளார் என்று நினைத்திருக்கிறார்.

ஆனால் அவரது மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், "ரிச்சர்ட் குளியறையில் தனது ஐ போனை சார்ஜ் போட்டிருந்ததும் அதன் காரணமாக ஏற்பட்ட மின்சார விபத்தில் இறந்துள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சன் செய்தி நிறுவனம், "குளியலறையில் சார்ஜ் செய்யப்பட்ட ரிச்சர்டின் ஐ போன் சார்ஜர் தவறுதலாக அவரது தோலில் விழுந்துள்ளது. இதில் மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளார்"

ரிச்சர்டின் மரணம் தற்செயலான மரணம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டதுடன், கைப்பேசிகளை தண்ணீருக்கு அருகே வைத்திருப்பது ஆபத்தானது என்பதை உணர வேண்டும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ரிச்சர்டின் தாயார் கூறும்போது, "நான் நிறைய நபர்களை நினைத்து வருத்தப்படுகிறேன். குறிப்பாக இளம் பருவத்தினர். அவர்கள் தங்கள் கைப்பேசிகளை விட்டுப் பிரிவதில்லை. அவர்களுக்கு அவை எவ்வளவு ஆபத்தானவை என்று தெரியவில்லை" என்றார்.

மேலும், இதுகுறித்து பிரேத பரிசோதக மருத்துவர் சீன் கம்மிங்ஸ் கூறும்போது, "கைப்பேசிகள் தீங்கற்ற சாதனங்கள் போலத் தோன்றும். ஆனால், குளியலறையில் அவை ஆபத்தானவை. கைப்பேசி நிறுவனங்கள் எச்சரிக்கை குறியீடுகளையும் இணைக்க வேண்டும். இது தொடர்பாக கைப்பேசி நிறுவனங்களுக்கு ஒரு அறிக்கை எழுத உள்ளேன்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in