

சவுதி அரேபியாவில் ஷியா மதகுருவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதைக் கண்டித்து, ஈரானில் உள்ள சவுதி தூதரகத்தை போராட்டக்காரர்கள் நேற்று தீயிட்டு கொளுத்தினர்.
ஷியா மதகுரு ஷேக் நிமர் அல் நிமர் (56) உட்பட 47 பேருக்கு சவுதி அரசு நேற்று முன்தினம் ஒரே நாளில் மரண தண்டனையை நிறை வேற்றியது. இந்த செயலுக்கு ஷியா பிரிவினர் அதிக அளவில் வசிக்கும் இரான், ஈராக் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன.
மேலும் பல்வேறு இடங்களில் போராட்டமும் நடைபெற்றது. ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகத்தை ஏராள மானோர் முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர்.
எனினும், போராட்டக்காரர்கள் தூதரக அலுவலகத்தை தீயிட்டு கொளுத்தினர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதுதவிர, அந்நாட்டின் 2-வது பெரிய நகரான மஷாத்தில் உள்ள சவுதி துணைத் தூதரகத்தையும் போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
இந்நிலையில், சவுதி தூதரகம் மற்றும் துணைத் தூதரக அலுவல கங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு ஈரான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஹுசைன் ஜபர் அன்சாரி போலீ ஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஈரான் தலைமை மதகுரு அயதொல்லா அலி கமேனி கூறும் போது, “ஷியா மதகுரு ஷேக் நிமர் அல் நிமர் சவுதியில் கொல்லப்பட் டது ஈரான், இராக், லெபனான் மற்றும் சிரியா உள்ளிட்ட நாடு களை கோபமடையச் செய்துள் ளது. இதற்காக சவுதி அரேபியா தெய்வீக பழிவாங்கலை எதிர் கொள்ள வேண்டியிருக்கும்” என்றார்.