Published : 05 Apr 2017 05:18 PM
Last Updated : 05 Apr 2017 05:18 PM

அருணாச்சலுக்கு தலாய் லாமா வருகை; தேவையான நடவடிக்கைகள் எடுப்போம்: இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை

அருணாச்சலப் பிரதேசத்திற்கு தலாய் லாமா வருகையை இந்தியா ஏற்பாடு செய்திருப்பது இருதரப்பு உறவுகளில் கடும் சேதங்களை விளைவித்துள்ளது என்று சீனாவின் வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.

அருணாச்சலப் பிரதேசத்தின் சர்ச்சைக்குரிய பகுதிகளில் தலாய் லாமா பயணம் மேற்கொள்ள இந்தியா அனுமதித்திருப்பது இருதரப்பு உறவுகளில் விரிசல்களை ஏற்படுத்தியுள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் தெரிவித்துள்ளார்.

“சீனாவின் கவலைகளுக்கு மதிப்பளிக்காமல் சீனா-இந்தியா எல்லையின் கிழக்குப் பகுதியில் சர்ச்சைக்குரிய இடங்களுக்கு தலாய் லாமா பயணம் செய்ய இந்தியா பிடிவாதமாக ஏற்பாடு செய்துள்ளது. இது சீன-இந்திய உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. சீனா இந்தியாவின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறது.

எல்லை விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு தெளிவானது. 14-ம் தலாய் லாமாவின் பங்கு குறித்தும் இந்தியா அறிந்திருக்கிறது. எனவே அவரது பயணத்திற்கு இந்தியா ஏற்பாடு செய்திருப்பது திபெத் குறித்த இந்திய நிலைப்பாட்டுக்கு எதிராகச் சென்றுள்ளது. அதுமட்டுமல்லாது எல்லைத் தகராறுகளை அதிகப்படுத்தியுள்ளது.

இருதரப்பு உறவுகளில் வலுவாகச் சென்று கொண்டிருந்த நிலையில் இந்தியா இப்படிச் செய்திருக்கிறது. இது இந்தியாவுக்கு பயனளிக்கப்போவதில்லை.

எங்கள் நாட்டு இறையாண்மையை காக்க நாங்கள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். சீனாவின் நலன்களுக்கு எதிராக தலாய் லாமாவை ஊக்குவிப்பதை இந்தியா நிறுத்த வேண்டும். இருநாடுகளுக்கு இடையேயான உணர்வுபூர்வ விவகாரங்களை ஊதிப்பெருக்க வேண்டாம், இருநாடுகளுக்கு இடையேயான் பேச்சுவார்த்தைகளை இப்படி செயற்கையாகத் தடை செய்யுமாறு நடந்து கொள்ள வேண்டாம்.

தலாய் லாமா வெறும் மதத்தலைவர் மட்டும்தானா என்பதை நீங்கள் நேர்மையாக எங்களிடம் கூற முடியுமா? விடை அனைவரும் அறிந்ததே. அவர் மதத்தலைவர் மட்டுமல்ல, எனவே அவரது பயணம் மதக்காரணங்களுக்காக மட்டுமேயல்ல. எனவே அவரது பயணத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டு வெற்று வார்த்தைகளால் அதை நியாயப்படுத்துவதை ஏற்க முடியாது. சீனாவின் நலன்களுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கைகளை இந்தியா நிறுத்திக் கொள்வது அவசியம்” என்று கடுமையாகத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x