Published : 08 Jan 2014 10:09 AM
Last Updated : 08 Jan 2014 10:09 AM

வங்கதேசம்: மீண்டும் ஆட்சி அமைக்கிறது அவாமி லீக்

வங்கதேசத்தில் எதிர்க்கட்சிகள் புறக்கணித்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற ஆளும் அவாமி லீக் கட்சி, மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. வங்கதேசத்தில் அரசியல் கட்சிகள் சாராத இடைக்கால அரசின் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஆளும் கட்சி ஏற்க மறுத்தது. இதையடுத்து கலீதா ஜியா தலைமையிலான வங்கதேச தேசியவாதக் கட்சி, ஜமாத் – இ – இஸ்லாமி உள்பட 18 கட்சிகள் தேர்தலை புறக்கணித்து விட்டன.

எனினும், ஜனவரி 5-ம் தேதி 300 தொகுதிகளுக்கான தேர்தல் திட்டமிட்டபடி நடந்தது. இதில் 147 தொகுதிகளில் மட்டுமே வாக்குப் பதிவு நடைபெற்றது. மீதமுள்ள தொகுதிகளில் அவாமி லீக் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் போட்டி யின்றி தேர்ந்தெடுக் கப்பட்டனர்.

பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி, வாக்குப் பதிவின் மூலம் 104 தொகுதிகளிலும், போட்டியின்றி 127 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அக்கட்சி மொத்தம் 231 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் கடந்த திங்கள்கிழமை இரவு தெரிவித்தது. இந்த தேர்தலில் அவாமி லீக்கின் கூட்டணிக் கட்சியான ஜாதியா கட்சி 33 இடங்களில் வெற்றி பெற்றது.

இந்தத் தேர்தலை புறக்கணித்து எதிர்க் கட்சிகள் போராட்டம் நடத்தியதால், வாக்குப் பதிவின்போது பல இடங்களில் வன்முறை நிகழ்ந்தது. 21 பேர் கொல்லப்பட்டனர். மிகவும் குறைந்த எண்ணிக்கையிலேயே வாக்குகள் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது. 40 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என தேர்தல் ஆணைய வட்டாரத்தில் கூறப்படுகிறது.

பேச்சு நடத்த ஐ.நா. வலியுறுத்தல்

வங்கதேசத்தில் கட்சிகள் அனைத்தும் பேச்சு நடத்தி அமைதியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறியுள்ளார். இது தொடர்பாக பான் கி மூனின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“வங்கதேசத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டு ஒப்பந்தம் ஏற்படாதது வருத்தமளிக்கிறது என்று பான் கி மூன் தெரிவித்துள்ளார். அவ்வாறு ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தால் அனைத்து கட்சிகளும் பங்கேற்கும் வகையிலான தேர்தல் நடைபெற்றிருக்கும்.

அனைத்து தரப்பினரும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்வதுடன் அமைதியான, சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ள வேண்டும். அனைத்து கட்சிகளும் பேச்சு நடத்தி பிரச்சினைக்குத் தீர்வு காண ஐ.நா. சபை உதவும்” என்றார். காமன்வெல்த் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஷ் சர்மா கூறுகையில், “வங்கதேச மக்கள் தங்களின் விருப்பங்களை தெரிவிக்க வாய்ப்பளிக்கும் வகையில் அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்றார்.

அமெரிக்கா வலியுறுத்தல்

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் மேரி ஹார்ப் கூறுகையில், “மொத்த தொகுதிகளில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது ஏமாற்றம் அளிக்கிறது.

ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. வன்முறைக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். சட்டம் – ஒழுங்கை பராமரிக்க ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். வங்கதேச மக்கள் அனைவரும் சுதந்திரமாக தங்களின் கருத்துகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஆளும் கட்சி ஏற்படுத்தித் தர வேண்டும். எதிர்க்கட்சிகள் தங்களின் கருத்துகளை வன்முறைக்கு இடம் கொடுக்காமல் அமைதியான முறையில் தெரிவிக்க வேண்டும்.

அந்நாட்டில் மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நியாயமான, நேர்மையான முறையில் மறுதேர்தல் நடத்துவதற்கான வாய்ப்பு உள்ளதாக நாங்கள் நம்புகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x