

அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் வசிக்கும் கிறிஸ்ஸி கார்பிட், 6 கிலோ எடையுள்ள பெண் குழந்தையைப் பிரசவித்திருக்கிறார்! “இது எனக்கு நான்காவது பிரசவம். வழக்கத்தைவிட இந்த முறை என் வயிறு மிகவும் பெரியதாக இருந்தது. இரட்டைக் குழந்தைகளாக இருக்கலாம் என்று நினைத்திருந்தோம். என்னைப் பரிசோதித்த மருத்துவர்கள் இயற்கையான பிரசவத்துக்கு வாய்ப்பு இல்லை. அறுவை சிகிச்சை செய்துதான் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்றனர். ஆபரேஷன் தியேட்டரில் மருத்துவர்களும் செவிலியர்களும் குழந்தையை வெளியே எடுத்தபோது அதிர்ந்து விட்டனர். பிறகு சிரிக்க ஆரம்பித்தனர். குழந்தை எவ்வளவு எடை இருப்பாள் என்று ஒவ்வொருவரும் தங்களுக்குத் தோன்றியதைப் பகிர்ந்துகொண்டனர். மயக்க மருந்து கொடுத்திருந்தாலும் எல்லா விஷயங்களும் என் காதில் விழுந்தன. சிறிது நேரத்தில் குழந்தையை என்னிடம் கொடுத்தபோது, 6 கிலோ எடை என்றார்கள். எனக்கு மகிழ்ச்சியிலும் ஆச்சரியத்திலும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கடந்த 3 வாரங்களாக என் எடை ஏறவே இல்லை. ஆனால் குழந்தையின் எடை ஏறிவிட்டது. ஒரு வாரம் கழித்துப் பிறந்திருந்தால், இன்னும் அரை கிலோ எடை அதிகரித்திருக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். எடை அதிகமாக இருந்தாலும் குழந்தைக்கு வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை. குழந்தைக்காக வாங்கி வைத்திருந்த துணிகளைப் போட முடியாது. 9 மாதக் குழந்தைக்குரிய துணிகள் தான் இவளுக்குச் சரியாக இருந்தது. என் மகளை வீடியோவாக எடுத்து ஆவணப்படுத்தி வைத்திருக்கிறேன்” என்கிறார் கிறிஸ்ஸி. “எந்தத் தாய்க்கும் 6 கிலோ எடையுள்ள குழந்தையைப் பிரசவிப்பது மிகவும் சிரமமான விஷயமாக இருக்கும். கிறிஸ்ஸி தைரியமானவர்” என்கிறார் கணவர் லாரி.
இரண்டு குழந்தைகளின் எடையில் ஒரு குழந்தை!
பிலடெல்பியாவிலுள்ள பயோக்வார்க் என்ற பயோடெக்னாலஜி நிறுவனம் மூளைச் சாவு அடைந்தவரை மீண்டும் உயிர் பிழைக்க வைக்க முடியும் என்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இதயத் துடிப்பு நின்றுவிட்டால் மரணம் அடைந்துவிட்டதாகக் கருதப்பட்டது. ஆனால் தொழில்நுட்பத்தின் உதவியால், செயற்கை சுவாசம் மூலம் இன்று இதயத்தைத் தொடர்ந்து துடிக்க வைக்க முடிகிறது. இதன் மூலம் உடலின் முக்கியமான உறுப்புகள் வேலை செய்யும் நிலையில் வைத்திருக்க முடிகிறது. இன்று பெரும்பாலான நாடுகளில் மூளைச் சாவு அடைந்த மனிதர் உயிரிழந்தவராகவே கருதப்படுகிறார். ஆனால் மூளைச் சாவு ஏற்பட்டவர்களுக்கு அவர்களது ஸ்டெம்செல்லை உடலுக்குள் செலுத்தி, முதுகெலும்புக்குள் மருந்துகளைச் செலுத்தி, 15 நாட்கள் லேசர் சிகிச்சை மூலம் நரம்புகளைத் தூண்டினால் மீண்டும் உயிர் பிழைக்க முடியும் என்கிறது இந்த நிறுவனம். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் 12 - 65 வயது நோயாளிகளிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டு, தடை செய்யப்பட்டது. பிறகு லத்தீன் அமெரிக்க நாடுகளில் இந்தப் பரிசோதனைகளைத் தொடர்ந்தனர். தற்போது தங்களால் மூளைச் சாவு அடைந்தவரை உயிர் பிழைக்க வைக்க முடியும் என்று அறிவித்திருக்கிறது பயோக்வார்க்.
முயற்சி அங்கீகரிக்கப்படும் வரை காத்திருப்போம்!