

சீனாவின் புதிய வான் பாதுகாப்பு மண்டல அறிவிப்பால், அந்நாட்டுக்கும் ஜப்பானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஜப்பான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தனது ராணுவ செலவை 5 சதவீதம் உயர்த்த முடிவு செய்துள்ளது.
பிரதமர் ஷின்ஜோ அபே தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. 2014 முதல் 2019 வரையிலான ராணுவ செலவை 5 சதவீதம் அதாவது, 24 ஆயிரம் கோடி அமெரிக்க டாலராக உயர்த்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்தொகை ஆளில்லா விமானங்கள், நீர்மூழ்கிகள், நிலத்திலும் நீரிலும் செல்லும் ஹோவர்கிராப்ட்கள், ஜெட் போர் விமானங்கள் போன்றவை வாங்குவதற்கு செலவிடப்படும். இதன் மூலம் ஜப்பானின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு சீனக்கடல் பகுதியில் சீனா தனது வான் எல்லையை விரிவாக்கும் வகையில், கடந்த மாதம் புதிய வான் பாதுகாப்பு மண்டலத்தை அறிவித்தது. ஜப்பான் கட்டுப்பாட்டில் உள்ள சென்காகு தீவுகளை உள்ளடக்கி புதிய வான் எல்லை அறிவிக்கப்பட்டதால், ஜப்பான் கடும் ஆட்சேபம் தெரிவித்தது. சீனாவின் அறிவிப்பை ஏற்க முடியாது என அமெரிக்கா, பிரிட்டன், தென் கொரியா உள்ளிட்ட ஜப்பானின் நட்பு நாடுகளும் அறிவித்தன.
இதன் பின்னணியில் ஜப்பான் மற்றும் 11 தென் கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் டோக்கியோவில் கடந்த சனிக்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது, கிழக்கு சீனக் கடல் பகுதியில் வான் பயண சுதந்திரம் மற்றும் பாதுகாப்பான விமானப் போக்குவரத்தை உறுதிப்படுத்த இணைந்து செயல்படுவோம் என கூட்டறிக்கை வெளியிட்டனர்.