

லிபியாவில் ஆயுதம் ஏந்திய பழங்குடியின குழுக்கள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், அந்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது.
லிபியாவின் தெற்கில் உள்ள செபா நகரில் அரபு பழங்குடியினர் - ஆப்பிரிக்க பழங்குடியினர் இடையே கடந்த 10ம் தேதி மோதல் வெடித்தது. பல நாள்கள் நீடித்த இந்த மோதலில் 31 பேர் கொல்லப்பட்டனர். 65 பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் சனிக்கிழமை அங்கு மீண்டும் மோதல் வெடித் ததால், நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் கருதி, நெருக்கடி நிலை பிரகடனம் செய்ய, அந்நாட்டின் அரசியல் அதிகார அமைப்பான பொது தேசிய காங்கிரஸ் முடிவு செய்தது. செபா நகருக்கு அருகில் உள்ள ராணுவ முகாம் ஒன்றை ஆயுதம் தாங்கிய குழு ஒன்று சனிக்கிழமை கைப்பற்றியதாக செய்தி வெளியானது. ஆனால் இம்முகாம் மீண்டும் ராணுவம் வசம் வந்துவிட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் சனிக்கிழமை மாலை தெரிவித்தார்.
“ராணுவ முகாமை தாக்கியவர்கள் பாலைவனப் பகுதிக்குள் தப்பியோடிவிட்டனர். அவர்களை விமானம் மூலம் தேடி வருகிறோம்” என்றார் அவர்.
இந்நிலையில் “செபாவில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. அங்கு கூடுதல் படைகளை அனுப்பவிருக்கிறேன்” என்று பிரதமர் அலி ஜீடன் தெரிவித்தார்.