

அமெரிக்க வாழ் இந்தியரின் கண்டுபிடிப்பான சிறிய ரக ஆன்டெனாவால், தங்களின் சேவை திருடப்படுவதாகக் கூறி அமெரிக்க தொலைக்காட்சி நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.
சேத் கனோஜியா என்ற அமெரிக்க வாழ் இந்தியரின் நிறுவனம் ‘ஏரியோ’ என்ற சிறிய ரக ஆன்டெனாவைக் கண்டறிந்துள்ளது. இந்த ஆன்டெனா மூலம் இணையத்தின் உதவியுடன் அனைத்து தொலைக்காட்சி ஒளிபரப்புகளையும் காண முடியும். எந்த வகை வீடியோ கருவியுடனும் இதனை இணைக்க முடியும். எவ்வித கம்பிவடமோ, கேபிள் பாக்ஸோ தேவையில்லை.
வாடிக்கையாளர் ஒரு ரிமோட் ஆன்டெனா மற்றும் டிஜிட்டல் வீடியோ ரெகார்டர் (டிவிஆர்) வைத்திருந்தால் போதுமானது. இதனால், அமெரிக்காவின் பெரும் தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனங்களான ஏ.பி.சி, என்.பி.சி, சி.பி.எஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பாதிப்புக்குள்ளாயின.
இந்நிறுவனங்கள் தங்களின் ஒளிபரப்பு சேவையைப் பெற வைத்திருந்த நடை முறையால், அவைகளுக்கு பல ஆயிரக் கணக்கான கோடி ரூபாய்கள் ஆண்டு தோறும் வருமானமாகக் கிடைத்து வந்தது. சேத் கனோஜியாவின் புதிய கண்டுபிடிப்பால், அந்நிறுவனங்களின் வருவாய் குறைய ஆரம்பித்தது.
ஆகவே, சேத் கனோஜியாவின் கண்டுபிடிப்பு தங்களின் ஒளிபரப்பு சேவையைத் திருடுவதாக அமெரிக்க தொலைக்காட்சி ஒளிபரப்பு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்துள்ளன. இது தொடர்பான செய்தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வழக்கு நடப்பு மாதம் விசாரணைக்கு வரவுள்ளது.
உச்ச நீதிமன்றம் தனக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கும் என கானோஜியா நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “தொலைக்காட்சி நிறுவனங்கள் ஏன் புதுமையான கண்டுபிடிப்புகளை ஆதரிப்பதில்லை என எனக்குப் புரியவில்லை. அது வும் வாடிக்கையாளருக்கு ஏதுவான, மேகமைத் தொழில்நுட்பக் கண்டு பிடிப்பை ஏன் எதிர்க்கிறார்கள்” என்றார்.
“ஆன்லைன் ஒளிபரப்பு, இணையம் சார்ந்த தொலைக்காட்சிகள், விளம்பரத்தை தடை செய்யும் உபகரணங்கள் உள்ளிட்டவற்றால் தொலைக்காட்சி நிறுவனங்கள் பெரும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளன. இந்நிலையில், ஏரியோ சிறு ஆன்டெனாக்களும், தொலைக்காட்சி அலைவரிசைகளை ஈர்க்கத் தொடங்கியிருக்கிறது” என நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அடுத்த 50 ஆண்டுகளுக்கு இணையம் மற்றும் மேகத்தொழில்நுட்பம் சார்ந்த காப்புரிமை விஷயங்கள் எப்படி கையாளப்படும் என்பதற்கான முதல் சட்டரீதியான போராட்டம் இதுவாக இருக்கும் எனவும் நியூயார்க் டைம்ஸ் வர்ணித்துள்ளது.
சேத் கனோஜியாவுக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டால், அது கேபிள் மற்றும் செயற்கைக் கோள் ஒளிபரப்பு தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பாக அமையும். பல்வேறு பொருத்துக் கட்டணங்கள் வசூலிப்பதை அவை நிறுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.