மாலத்தீவின் 6-வது அதிபராக யாமீன் அப்துல் கயூம் பதவியேற்பு

மாலத்தீவின் 6-வது அதிபராக யாமீன் அப்துல் கயூம் பதவியேற்பு
Updated on
1 min read

மாலத்தீவின் 6-வது அதிபராக அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் இன்று பதவியேற்றுக்கொண்டார். இதன்மூலம் கடந்த 2 ஆண்டுகளாக நிலவிய அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

முன்னாள் சர்வாதிகார ஆட்சியாளரான மவுமூன் அப்துல் கயூமின் ஒன்றுவிட்ட சகோதரரான 54 வயது யாமீன் அப்துல் கயூம், மாலத்தீவில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட 2-வது அதிபர் என்ற சிறைப்பைப் பெற்றார்.

புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்காக நேற்று நடைபெற்ற 2-ம் சுற்று தேர்தலில் மாலத்தீவு முற்போக்குக் கட்சியைச் சேர்ந்த யாமீன் எதிர்பாராதவிதமாக 51.39 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். 2-ம் சுற்று தேர்தலில் 91.41 சதவீத வாக்குகள் பதிவானதாகவும், அதில் யாமீன் ஒரு லட்சத்து பதினோறாயிரத்து 203 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாகவும் தேர்தல் ஆணையர் தவ்பீக் அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தார்.

யாமீனை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் அதிபரும் மாலத்தீவு ஜனநாயகக் கட்சித் தலைவருமான முகமது நஷீத் 1,05,181 (48.61 சதவீத) வாக்குகளை மட்டுமே பெற்றார்.

கடந்த 9-ம் தேதி நடைபெற்ற முதல் சுற்று வாக்குப் பதிவில் நஷீத் 46.4 சதவீத வாக்குகளையும், யாமீன் 30.3 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தலைநகர் மாலியில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் யாமீனுக்கு அந்நாட்டு தலைமை நீதிபதி அகமது பயஸ் பதவிப் பிரமானம் செய்து வைத்தார். அப்போது 21 குண்டுகள் முழங்க அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் துணை அதிபராக முகமது ஜமீல் பதவியேற்றுக் கொண்டார்.

அதிபராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு யாமீன் தனது தொடக்க உரையில், மாலத்தீவை பாதுகாக்கவும், இந்த மண்டலத்திலேயே மிகவும் வளர்ச்சி பெற்ற நாடாக உயர்த்தவும் கடுமையாக முயற்சி செய்வேன் என்றும், அண்டை நாடுகளுடன் நல்லுறவைப் பேணுவேன் என்றும் கூறினார்.

இந்தப் பதவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர்கள் நஷீத் மற்றும் மவுமூன் உள்பட பலர் பங்கேற்றனர். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

"மாலத்தீவில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு ஆட்சி அமைத்துள்ளது. இந்த நாள் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான நாள்" என்றார் அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் இமாத் மசூத்.

கடந்த 2008-ல் ஜனநாயக முறைப்படி முதன் முறையாக அதிபரான நஷீத், 2012-ல் சட்டத்தை மீறியதாகக் கூறி வலுக்கட்டாயமாக பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, முகமது வாஹீத் அதிபரானார். இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in