

பெண் கல்வி முன்னேற்றத்திற்காக பிரச்சாரம் செய்து வரும் பாகிஸ்தான் இளம் பெண் மலாலா யூசூப் சாயிக்கு 2013- ஆம் ஆண்டுக்கான ஐ.நா. மனித உரிமைகள் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.
மனித உஅரிமைகளைப் பேண சிறப்பாக பணியாற்றும் நபர்களுக்கு இவ் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.
இதற்கு முன்னர் தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா, அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் உள்ளிட்டோர் ஐ.நா. மனித உரிமைகள் விருதைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மலாலாவுக்கு விருது வழங்கியது குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணைய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்: "இவ்விருது மனித உரிமைகளை பாதுகாத்தமைக்காகவும், மனித உரிமை பாதுகாவலர்களை சர்வதேச சமூகம் நன்றியுடன் எப்போதும் ஆதரிக்கும் என்பதை உணர்த்தவும் வழங்கப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் பெண் கல்விக்காக போராடிய மலாலா தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். இதில் படுகாயமடைந்த மலாலா பிரிட்டனில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். உயிர் பிழைத்தப் பின்னர், " தாலிபான் அச்சுறுத்தலுக்காக என் பணியை எப்போதும் நிறுத்த மாட்டேன்", என அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.