Last Updated : 10 Dec, 2013 12:00 AM

 

Published : 10 Dec 2013 12:00 AM
Last Updated : 10 Dec 2013 12:00 AM

அழகிய புதிரே, அமெரிக்காவே!

உலகம் நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கும் நேரத்தில் அமைதியாக ஒரு டீலிங் நடந்து முடிந்திருக்கிறது. அமைதியாக நடந்தாலும் இது ஆபத்தான டீலிங். ஆயுத டீலிங்குக்கு சமமான டீலிங். அதுவும் அமெரிக்க டீலிங். அதனாலேயே இதனைக் கவனிப்பது அவசியமாகிறது.

ரோஸோபொரான் எக்ஸ்போர்ட் (Rosoboron export) என்பது ஒரு ரஷ்ய கம்பெனி. ஆயுதங்கள் மற்றும் ராணுவத் தளவாடங்கள், ராணுவ வாகனங்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஸ்தாபனம். பிரசித்தி பெற்ற எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர்களை உலகெங்கும் பறக்க விடுவது இந்த நிறுவனம்தான்.

இந்த நிறுவனத்துடன் அமெரிக்கா ஓர் ஒப்பந்தம் செய்து, முதல் கட்டமாக சுமார் ஒரு பில்லியனுக்குச் (சுமார் ரூ. 6200 கோடி) சற்று அதிகமான மதிப்பீட்டுத் தொகைக்கு எம்.ஐ.17 ரக ஹெலிகாப்டர்களுக்கு ஆர்டர் கொடுத்திருக்கிறது. ரோஸோ பொரானுக்கென்ன? பெரிய பிசினஸ். நல்ல டீலிங். பக்காவாக வாகனங்களை பார்சல் செய்து ஆப்கனிஸ்தானுக்கு அனுப்பி வைத்துவிடும். அமெரிக்கா ஆர்டர் கொடுத்திருப்பதே அதன் ஆப்கன் சார்ந்த தேவைகளுக்காகத்தான். ஆப்கன் தேசிய பாதுகாப்புப் படையின் உபயோகத்துக்காகவே இந்த ஹெலிகாப்டர்கள் வாங்கப்படுகின்றன.

ஆப்கனிஸ்தான் ராணுவத்தின் வசமுள்ள வாகனாதி சௌகரியங்கள் அனைத்தும் லொடலொடத்துப் போய்விட்ட நிலையில் இந்தப் புதிய ஹெலிகாப்டர்கள் வாங்கப்படுவது அங்கே அவசியமாகியிருக்கிறது.நிற்க. இதில் குடைச்சல் எங்கே வருகிறது என்றால் மேற்படி ரோஸோபொரான் எக்ஸ்போர்ட் நிறுவனம்தான் சிரிய ராணுவத்துக்கும் ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆயுதங்களை சப்ளை செய்து கொண்டிருக்கிறது.

ரஷ்யாவின் பரிபூரண ஆசீர்வாதத்துடன், அமெரிக்க ஆதரவு புரட்சிப் படைகளுக்கு எதிராக அங்கே சிரிய ராணுவம் போரிட்டுக்கொண்டிருக்க, எதிரியின் கொள்முதல் மையத்திலேயே அமெரிக்காவும் ஹெலிகாப்டர் வாங்குவது அமெரிக்க ராணுவத்துக்கே மாபெரும் குழப்பத்தை அளித்திருக்கிறது.

இது, இதுவரை யாரும் செய்யாதது. நினைத்துக்கூடப் பார்த்திராத காரியம். அமெரிக்காவில் இல்லாத ஹெலிகாப்டர் கம்பெனியா? உத்தரவு போட்டால் உடனே வேலை ஆரம்பித்து கட்டிக்கொடுத்துவிட ஆளில்லையா? அமெரிக்கத் தொழில்நுட்பத்தைக் காட்டிலும் ரஷ்ய நிறுவனத்தின் தொழில்நுட்பம் அத்தனை சிறந்தது என்று அமெரிக்காவே நினைக்கிறதா? இது அவமானமல்லவா? பெரியண்ணன் பெருமைக்குக் களங்கம் தரக்கூடிய செயலல்லவா? அல்லது மேலோட்டமான பார்வைகளுக்குப் புலப்படாத உள்ளார்ந்த உள்குத்துகள் ஏதும் இதில் இருக்குமா?

பென்சில்வேனியாவில் இயங்கும் போயிங் நிறுவனம் இத்தகு ராணுவ ஹெலிகாப்டர்களைத் தயாரிப்பதில் பேர்போனது. சொல்லப் போனால் போயிங் நிறுவனத்தின் 'சினூக்' ரக ஹெலிகாப்டர்கள் ரோஸோபொரான் ஹெலிகாப்டர்களைக் காட்டிலும் விலை மலிவானதும்கூட. சொந்த நாட்டில் பிறர்க்கடிமை செய்திடாமல் சௌக்கியமாக உற்பத்தி செய்யும் வாகனாதி சௌகரியங்களை விட்டு அமெரிக்கா ஏன் ஒரு ரஷ்ய கம்பெனியிடம் போய் பிசினஸ் பேசவேண்டும்? என்றால், கிடைக்கிற ஒரே பதில், ஆப்கன் ராணுவத்துக்கு ரஷ்யத் தயாரிப்புகள் பரிச்சயமானவை என்பது மட்டுமே.

ஆனால் ராணுவ தளவாடக் கொள்முதலுக்கெல்லாம் இந்தக் காரணம் மட்டுமே போதுமானதா? 2006ல் ஜார்ஜ் புஷ் அதிபராக இருந்த சமயம் இந்த ரோஸோபொரான் எக்ஸ்போர்ட் நிறுவனத்துக்கு அதிகாரபூர்வத் தடையே அறிவித்திருந்தார். காரணம், அமெரிக்காவுக்கு ஆகாத தேசங்களான ஈரான் மற்றும் சிரியாவுக்கு இந்த நிறுவனம் ஆயுத சப்ளை செய்துகொண்டிருக்கிறது என்பதுதான். இப்போதும் மேற்படி சப்ளையில் எந்தவித தடையுமில்லை; மாற்றமும் இல்லை. சொல்லப் போனால் சிரிய உள்நாட்டு யுத்தம் தொடங்கிய பிறகு வேலைகள் முன்னைக் காட்டிலும் ஜரூராகத்தான் நடந்து கொண்டிருக்கின்றன.

புஷ்ஷுக்கு ஒவ்வாத டீலிங் ஒபாமாவுக்கு எப்படி சகாயமாகிறது? அமெரிக்க நாடாளுமன்றம் எப்படி இதற்கு ஒப்புக்கொண்டது? கடந்த ஜூலையிலேயே அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலுமாக இது தொடர்பான விவாதம் வந்தபோது சுமார் எண்பதுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார்கள். எதிர்த்தவர்கள் அத்தனை பேரும் எதிர்க்கட்சிக்காரர்கள் மட்டும் அல்ல என்பதுதான் இதில் கவனிக்கப்படவேண்டியது. ஆனாலும் இந்த டீலிங் இப்போது நடந்து முடிந்திருக்கிறது. அமெரிக்கா, ரஷ்ய நிறுவனத்திடமிருந்து ஹெலிகாப்டர்கள் வாங்குகிறது. அதை ஆப்கனிஸ்தானில் பயன்படுத்தவிருக்கிறது.

சிரியாவில் எதிரியாகவும் ஆப்கனிஸ்தானில் நண்பனாகவும் ஒரே நிறுவனத்தை எவ்வாறு பார்க்க முடிகிறது என்று கேட்டால் அதற்குப் பதில் கிடையாது. இதுதான் அமெரிக்கா. அமெரிக்காவைப் புரிந்துகொள்ள இதுவும் ஒரு சந்தர்ப்பம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x