

கடும் சர்ச்சைக்கு நடுவே மாலத்தீவுகளில் சனிக்கிழமை நடை பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டு அதிபர் அப்துல்லா யாமீனின் மாலத்தீவு முற்போக்கு கட்சி (பிபிஎம்) தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
முன்னாள் அதிபர் முகமது நஷீத் தலைமையிலான மாலத்தீவு ஜனநாயகக் கட்சி நகர்ப்புறங்களில் உள்ள இடங்களைக் கணிசமாக கைப்பற்றி உள்ளது. எனினும், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும் போது, அக்கட்சி வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது. மாலத்தீவுகள் நாடாளு மன்றத் தில் மொத்தம் உள்ள 85 இடங்களுக்கு 302 வேட்பாளர்கள் போட்டி யிட்டனர். மொத்தம் உள்ள 2.4 லட்சம் வாக்காளர்களில் 3-ல் 2 பங்கு பேர் வாக்களித்ததாகவும் வாக்குப்பதிவு நியாயமாக நடைபெற்றதாகவும் தேர்தல் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் சுற்று அதிபர் தேர்தலில் நஷீத் வெற்றி பெற்றார். ஆனால், இந்தத் தேர்தலை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இதுபோல அடுத்தடுத்து நடைபெற்ற 2 தேர்தலும் ரத்து செய்யப்பட்டன. பின்னர் கடந்த ஆண்டு நவம்பர் 16-ல் நடைபெற்ற தேர்தலில் யாமீன் வெற்றி பெற்று அதிபரானார். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை எனக் கூறி, தேர்தல் ஆணையத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகிய இருவரும் கடந்த 9-ம் தேதி பதவி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் பதவி காலியாக இருப்பதால் தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என யாமீன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதுதொடர்பாக நீதிமன்றம் எவ்வித உத்தரவும் பிறப்பிக்காத தால், திட்டமிட்டபடி சனிக்கிழமை வாக்குப்பதிவு அமைதியாக நடை பெற்றது குறிப்பிடத்தக்கது.