

சைபீரியாவின் துவா ஆற்றுக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் தாத்தா, பாட்டியுடன் வசித்துவந்தாள் 4 வயது சக்லனா. தாத்தாவுக்குப் பார்வை கிடையாது. கணவரையும் பேத்தியையும் கவனித்து வந்த பாட்டி, சில நாட்களுக்கு முன் மாரடைப்பால் இறந்துபோனார். நகரத்தில் வசிக்கும் மகன், மகளிடம் தகவல் சொல்லவேண்டும் என்றால் கூட 5 மைல் தொலைவு செல்லவேண்டும். அருகில் எந்த வீடும் கிடையாது. வேறு வழியின்றி பாட்டி இறந்த தகவலை சக்லனாவிடம் சொல்லி அனுப்பினார் தாத்தா. மைனஸ் 42 சென்டிகிரேட் வெப்பநிலை என்பதால் ஆறு உறைந்திருந்தது. அதிகாலை 6 மணிக்கு மார்பளவு பனியில் நடக்க ஆரம்பித்தாள் சக்லனா. 3 மணி நேரங்கள் கழித்துப் பக்கத்து கிராமத்தை அடைந்தாள். பாட்டி இறந்த தகவலைச் சொன்னாள். அங்கிருந்தவர்கள் தொலைபேசி மூலம் சக்லனாவின் பெற்றோருக்குத் தகவல் கொடுத்தனர். “மிக மோசமான பருவநிலை. மார்பளவு பனியில் 4 வயது குழந்தை 5 மைல்களைக் கடந்துவந்தது ஆச்சரியமான விஷயம். ஓநாய்கள் உலவும் பகுதி. எந்தக் கால்நடைகளையும் அவை விட்டு வைப்பதில்லை. நல்லவேளை சக்லனாவுக்கு ஆபத்து எதுவும் வரவில்லை. சக்லனாவை மருத்துவமனையில் சேர்த்திருக்கிறோம். பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. ஆனாலும் மருத்துவமனையில் சில நாட்கள் தங்கியிருக்க வேண்டும். ஒரு மருத்துவருடன் சக்லனா வீட்டுக்குச் சென்று, பாட்டி இறந்ததை உறுதி செய்தோம். தாத்தாவைப் பாதுகாப்பாக அழைத்துவந்துவிட்டோம்” என்கிறார் சக்லனாவின் உறவினர். அரசியல்வாதிகளிலிருந்து பொதுமக்கள் வரை சக்லனாவின் துணிச்சலைப் பாராட்டுவதற்காக மருத்துவமனைக்கு வந்துகொண்டேயிருக்கிறார்கள்.
4 வயது சக்லனாவின் துணிச்சலை என்னவென்று சொல்வது?
பிரேசிலின் ஃபெடரல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அன்ட்ரெஸ்ஸா லூகாஸும் லாரென் மெனெகானும் கரப்பான் பூச்சிகளைச் சேர்த்து பிரெட், கேக் போன்ற உணவுப் பொருட்களை உருவாக்கி வருகிறார்கள். “அடுத்த 10 ஆண்டுகளில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும். சத்தான உணவு இல்லாமல் மக்கள் துன்பத்துக்கு ஆளாவார்கள். அப்போது பூச்சிகளை உணவாக்கிக் கொள்வதைத் தவிர வேறு சிறந்த வழியில்லை. சாதாரண கோதுமை மாவை விட கரப்பான் பூச்சிகள் சேர்த்த கோதுமை மாவில் 40% சத்துகள் அதிகம் இருக்கின்றன. இது வீட்டில் சுற்றித் திரியும் கரப்பான்பூச்சிகள் இல்லை. சுத்தமான இடங்களில் காய்கறிகளையும் பழங்களையும் உண்டு வாழும் சிறப்புக் கரப்பான்கள். இவற்றில் 70% புரோட்டீன் சத்துகள் உள்ளன. ஒமேகா 3, ஒமேகா 9 உட்பட அத்தியாவசியமான 9 சத்துகளில் 8 சத்துகள் இருக்கின்றன. பூச்சிகளை மாவாக மாற்றி, கோதுமை மாவில் கலந்துவிடுகிறோம். கோதுமை மாவுடன் ஒப்பிடும்போது 10% கரப்பான் மாவில் 49.16% புரோட்டீன் அதிகமாக இருப்பது எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது. இன்னும் பத்தாண்டுகளுக்குப் பிறகு பூச்சி உணவுகள்தான் பிரதானமாக இருக்கப் போகின்றன” என்கிறார்கள் இந்த இளம் ஆராய்ச்சியாளர்கள்.
வந்துவிட்டது சத்துகள் மிகுந்த கரப்பான் பிரெட்!