

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, மத்திய அரசுக்கு குடியரசுதின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
நாட்டின் 65-வது குடியரசு தினத்தை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு ஒபாமா அனுப்பி உள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
“இரு நாடுகளுக்கிடையிலான நட்பு மற்றும் கூட்டாண்மை அடிப்படையிலும் அமெரிக்க மக்கள் சார்பாகவும் உங்களுக்கு குடியரசு தின வாழ்த்துகள். இரு நாடுகளிலும் வளமும் அமைதியும் நீடிக்க மனமார்ந்த வாழ்த்துகள்.
இரு நாடுகளைச் சேர்ந்த மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இந்த உண்மையான சர்வதேச நட்புறவு நீடிக்கவும் இனி வரும் காலங்களிலும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட மிகவும் ஆவலாக உள்ளேன்” இவ்வாறு அந்த வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாக பிரணாப் முகர்ஜி யின் செய்திப் பிரிவு செயலாளர் வேணு ராஜாமணி டெல்லியில் தெரிவித்தார்.
குடியரசு தின விழாவை முன்னிட்டு வாஷிங்டனில், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் எஸ். ஜெய்சங்கர் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அந்நாட்டு நிர்வாகம் மற்றும் இயற்கைவளத் துறை துணை அமைச்சர் ஹீத்தர் ஹிக்கின்பாட்டம் பேசியதாவது:
இந்தியாவுடனான அமெரிக்க உறவு விசாலமானதும் உறுதியான தும் ஆகும். குடியரசு தின விழாவானது இந்தியாவின் வலிமையை பறைசாற்றும் ஜனநாயக நடைமுறையையும் பாரம்பரியத்தையும் நினைவுபடுத் துவதாக உள்ளது.
மேலும், இரு நாட்டு மக்கள் மற்றும் அரசுகளுக்கிடையே உள்ள நட்புறவின் வலிமையை நினைவுபடுத்துவதாகவும் இந்த விழா அமைந்துள்ளது. பழமை வாய்ந்த மற்றும் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளுடன் ராஜ்ஜிய உறவு வைத்துக் கொண்டுள்ளது என அமெரிக்கா எப்போதுமே கூறி வருகிறது என்றார்.
விசா முறைகேடு புகாரில் சிக்கிய இந்திய துணைத் தூதர் தேவயாணி கோப்ரகடே கைது விவகாரத்தால் சிறிதளவு பாதிக்கப்பட்டிருந்த இருதரப்பு உறவும் மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது என ஜெய்சங்கர் தெரிவித்தார்.