பாக். நடிகையை கொலை செய்த சகோதரர் கைது

பாக். நடிகையை கொலை செய்த சகோதரர் கைது
Updated on
1 min read

பாகிஸ்தான் நடிகை குவான்டீல் பலோச்சை கொலை செய்த அவரது சகோதரர் வாசிம் அகமது இன்று கைது செய்யப்பட்டார்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரைச் சேர்ந்தவர் குவான்டீல் பலோச் (26). நடிகையும் மாடலுமான அவர் சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்கள், சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு உலகின் கவனத்தை ஈர்த்து வந்தார்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான குவான்டீல் (26), முல்தான் நகரில் நேற்றுமுன்தினம் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது தம்பி வாசிம் அகமதுவை (25) போலீஸார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:

எங்களது குடும்ப கவுரவத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள், வீடியோக்களை குவான்டீல் வெளியிட்டு வந்தார். இதை பலமுறை கண்டித்தேன். ஆனால் அவர் திருந்தவில்லை.

சம்பவத்தன்று அவருக்கு மயக்க மாத்திரையை கொடுத்தேன். அதை சாப்பிட்ட அவர் சிறிது நேரத்தில் மயங்கி சரிந்தார். பின்னர் அவரது கழுத்தை நெரித்தும் முகத்தில் தலையணையை அழுத்தியும் கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நடிகை குவான்டீலின் இறுதிச் சடங்கு அவரது சொந்த ஊரான முல்தானில் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சமூக வலைத்தளங்களிலும் அவருக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in