

சிரியாவில் இட்லிப் நகரில் திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட கார் குண்டுவெடிப்பில் 20 பேர் உயிரிழந்தனர்; பலர் காயமடைந்தனர்.
இட்லிப் நகரின் வணிக வளாகப் பகுதியில் கார் குண்டு பயங்கரமாக வெடித்துச் சிதறியது. இதில் காயமடைந்த பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸில் வெடிகுண்டுகளை நிரப்பிய 2 கார்களை தற்கொலைப் படை தீவிரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு வெடிக்கச் செய்தனர்.
அரசு தொலைக்காட்சி நிறுவனம் அமைந்துள்ள உன்மயாத் சதுக்கம் பகுதியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
அடுத்தடுத்து வந்த 2 கார்கள் கட்டடத்தின் வாயிலில் மோதி வெடித்துச் சிதறின. இதில் உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை.
கார் குண்டுகள் வெடித்த இடத்துக்கு மிக அருகில் உள்ள ஹோட்டலில், ஐ.நா. சபை ரசாயன ஆயுத நிபுணர்கள் தங்கியுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.