

வெளிநாட்டு ஊழியர்களுக்கான 457 விசா திட்டத்தை ரத்து செய்த நிலையில், கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய குடியுரிமை சட்டத்தை ஆஸ்திரேலிய அரசு அறிமுகம் செய்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் திறமை யான ஊழியர்களுக்கு பற்றாக் குறை நிலவியது. இதனால் அங்குள்ள நிறுவனங்கள், வெளிநாட்டு ஊழியர்களை 4 ஆண்டுகளுக்கு பணியமர்த்திக் கொள்வதற்கு வசதியாக 1996-ல் அந்நாட்டு அரசு ‘457’ என்ற விசா திட்டத்தை அறிமுகம் செய்தது.
இதனால் இந்தியர்கள் அதிக அளவில் (4-ல் ஒருவர்) பயனடைந்து வந்தனர். இதனால் உள்நாட்டினரின் வேலைவாய்ப்பு பறிபோவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, கடந்த 2 தினங்களுக்கு முன்பு இந்த விசா திட்டத்தை ரத்து செய்த அந்நாட்டு பிரதமர் மால்கம் டர்ன்புல், புதிய விசா முறை அறிமுகம் செய்யப்படும் என கூறியிருந்தார். இந்நிலையில்தான் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய புதிய குடியுரிமை சட்டத்தை பிரதமர் டர்ன்புல் நேற்று அறிமுகம் செய்தார். புதிதாக பணி விசா கோருபவர்களுக்கு இது பொருந்தும்.
இதன்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 4 ஆண்டுகளுக்கு நிரந்தரமாக தங்கி பணியாற்ற வேண்டும். இது இப்போது ஓராண்டாக உள்ளது. மேலும் குடியுரிமை தேர்வில் எத்தனை முறை வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என்ற முறை ரத்து செய்யப்படுகிறது. இனி 3 முறை தோல்வி அடைந்தால் 2 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாது. தேர்வில் மோசடி செய்ய முயன்றால் வாழ்நாள் தடை விதிக்கப்படும்.
இதுதவிர, விசா பெற முழுமையான ஆங்கில தேர்வில் வெற்றி பெற வேண்டும். இந்தத் தேர்வு பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உரிய மதிப்பு அளிப்பது தொடர்பானதாக இருக்கும். ஆஸ்திரேலியாவின் மதிப்பு மற்றும் பொறுப்புணர்வை மதிப்பிடும் வகையிலும் கேள்விகள் இடம்பெறும்.
இதுகுறித்து டர்ன்புல் கூறும்போது, “ஆஸ்திரேலிய சட்டங்களை மதிப்பவர்கள் மற்றும் நாட்டின் சிறந்த எதிர்காலத்தை உருவாக்க கடுமையாக உழைக்க விரும்புகிறவர்களுக்கு மட்டுமே குடியுரிமை வழங்கப்படும். குற்றச் செயல் மற்றும் குடும்ப வன்முறையில் தொடர்புடையவர் களுக்கு குடியுரிமை வழங்கப்பட மாட்டாது” என்றார்.