

வடக்கு ஆப்பிரிக்க நாடான லிபியா வின் முன்னாள் தலைவர் கர்னல் முவம்மர் கடாபியின் மகன்களில் ஒருவரான அல்ஸாதியை நைஜர் நாடு வியாழக்கிழமை வெளியேற்றி, லிபிய அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தது.
லிபியாவில் 2011-ல் தமது தந்தை கடாபி வசமிருந்து ஆட்சி பறிக்கப்பட்டு அவர் அடித் துக் கொல்லப்பட்டதும் அல் ஸாதி மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜருக்கு தப்பினார். அங்கு அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
சர்வதேச சட்டத்துக்கு உட்பட்டு அல் ஸாதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தலைநகர் திரிபோலியில் உள்ள லிபிய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். முவம்மர் கடாபியின் 8 பிள்ளைக ளில் ஒருவர் அல் ஸாதி.
திரிபோலி விமான நிலையத் துக்கு வந்து சேர்ந்த அல் ஸாதி அங்கிருந்து தலைநகரில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப் பட்டார். சிறைக் காவலர்களால் தலை மொட்டையடிக்கப்பட்டு தாடி மழிக்கப்பட்ட அல் ஸாதி, சிறையில் அடைக்கப்பட்டுள்ள படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின.
கால் பந்தாட்டத்தை மிகவும் நேசிப்பவரான அல் ஸாதி லிபியா கால் பந்தாட்ட அணிக்கு கேப்ட னாகவும் இருந்தவர். நாட்டின் சிறப்பு அதிரடிப்படைக்கும் தலைமை வகித்துள்ளார். அல் ஸாதியை ஒப்படைக்கும்படி லிபியாவின் புதிய அரசு விடுத்த கோரிக்கையை முன்னதாக நைஜர் நிராகரித்தது.
2012ல் இன்டர்போல் அமைப்பானது சிவப்பு அறிக்கை பிறப்பித்தது. இதன்படி உறுப்பு நாடுகள் அவரை கைது செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. கடாபி ஆட்சியில் இருந்தபோது அரசுக்கு எதிராக நடந்த ஆர்ப் பாட்டங்களை நசுக்கியதாக வும், ஆர்ப்பாட்டக்காரர்களை கொன்று குவித்ததாகவும் குற்றச் சாட்டுக்கு உள்ளான கடாபி ஆதரவாளர்கள் வரிசையில் அல் ஸாதியும் ஒருவர்.
கடாபியின் வாரிசாக வளர்க்கப்பட்ட இன்னொரு மகன் சேப் அல் இஸ்லாம் மேற்கு லிபியாவில் உள்ள நகரில் சிறை வைக்கப்பட்டுள்ளார். கடாபியின் மகன்களில் அல் ஸாதியும் அல் இஸ்லாமும் தான் லிபியாவில் தற்போது இருப்பவர்கள்.
கடாபி ஆட்சிக்கு எதிரான போராட்டத்தின்போது 3 மகன்கள் கொல்லப்பட்டனர். மற்ற மகன்கள், கடாபியின் மனைவியும் அல் சாதியின் தாயாருமான சாபியா ஆகியோர் அல்ஜீரியாவில் தஞ்சம் அடைந்துள்ளனர்.