நடிகர் ஓம் புரியின் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இரங்கல்

நடிகர் ஓம் புரியின் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இரங்கல்
Updated on
1 min read

பழம்பெரும் இந்தி நடிகர் ஓம் புரியின் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப், நடிகர்கள், பாகிஸ்தான் இந்து சபை மற்றும் பொதுமக்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஓம் புரியின் மரணம் குறித்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப், "ஓம் புரி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கலாச்சார உறவுகளை இணைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும் அமைதிக்கு எதிரான இயக்கங்களின் அச்சுறுத்தல்களுக்கு இணங்கவும் ஓம் புரி மறுத்துவிட்டதாக ஷெரிஃப் தெரிவித்தார்.

அனைத்து பாகிஸ்தான் செய்தி சேனல்களும் ஓம் புரியின் மறைவை ஒளிபரப்பி அவருக்கு அஞ்சலி செலுத்தின. பாகிஸ்தான் ட்விட்டரில் #OmPuri என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி, நாள் முழுவதும் தொடர்ந்து முன்னிலை வகித்தது.

ஓம் புரிக்கு இரங்கல் தெரிவித்த பாகிஸ்தான் இந்து சபையின் தலைவர் ரமேஷ் வங்க்வானி, கடந்த வருடம் இந்தியாவுக்கு பாகிஸ்தான் திரைக்கலைஞர்கள் வரக்கூடாது என்று கூறப்பட்ட நிலையில் ''கலையையும், அரசியலையும் பிரித்து வையுங்கள். பாகிஸ்தான் நடிகர்களுக்கு தடை விதிப்பதால் எந்த மாற்றமும் ஏற்படாது. அந்நாட்டு நடிகர்கள் இங்கு சட்டவிரோதமாக பணிபுரியவில்லை. முறையான 'விசா'வுடன் தான் வருகிறார்கள்'' என்று ஓம் புரி கூறியதை நினைவு கூர்ந்தார்.

ஏராளமானோர் இரங்கல்

இந்தியப் படங்களோடு, ஏராளமான பாகிஸ்தான் படங்களிலும் நடித்து பிரபலமானவர் ஓம் புரி. இந்தியாவில் உருவான படங்கள் மட்டுமன்றி இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் தயாரான படங்களிலும் நடித்துள்ளார்.

ஓம் புரி வெள்ளிக்கிழமை (ஜனவரி 6) காலை அன்று ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 66. ஓம் புரியின் மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி, சோனியா காந்தி மற்றும் ஏராளமான திரையுலக நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in